என்னுடைய நண்பன் மிக்கி(Mickey) தனது கண் பார்வையை இழந்து கொண்டிருந்த நிலையிலும், “நான் தேவனை தினந்தோறும் போற்றித் துதிக்கப் போகிறேன். ஏனெனில் அவர் எனக்காக அநேக காரியங்களை செய்துள்ளார்” என்று சொன்னான்.
முடிவில்லா துதியை ஏறெடுப்பதற்கான அற்புதமான காரணத்தை இயேசு நமக்கும் மிக்கிக்கும் தந்துள்ளார். சிலுவையில் அறையப்படுவதற்கு முந்திய நாள் இரவு, இயேசு தமது சீஷர்களோடு பஸ்கா உணவு உண்பதை மத்தேயு 28ஆம் அதிகாரத்தில் காணலாம். உணவருந்தி முடிந்ததும், “அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடி பின்பு ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்” என்று 30ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த இரவு அவர்கள் ஏதோ ஒரு பாடலைப் பாடவில்லை – அது ஒரு துதிப் பாடலாகும். பல நூற்றாண்டுகளாக, ‘ஹல்லேல்’(Hallel) என்று குறிப்பிடப்பட்ட சில சங்கீதங்களை பஸ்கா பண்டிகையின்போது எபிரேயர்கள் பாடி வந்தனர் (எபிரேய மொழியில் ஹல்லேல் என்றால் “துதி” என்று அர்த்தம்). சங்கீதம் 113-118ல் இடம்பெற்றுள்ள ஹல்லேல் பாடல்கள், நமது இரட்சிப்பாகிய தேவனை கனம்பண்ணுவதை காணலாம் (118:21). தள்ளப்பட்ட கல் மூலைக்கல் ஆனதையும் (வச. 22) தேவனுடைய நாமத்தில் வருபவரைப் பற்றியும் இந்தப் பாடல்கள் குறிப்பிடுகின்றன (வச. 26). அப்படியென்றால், “இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்” என்று அவர்கள் அந்த இரவிலே பாடியிருக்கவேண்டும் (வச. 24).
இயேசுவும் அவரது சீஷர்களும் பஸ்கா இரவில் தேவனைப் பாடித் துதித்ததின் மூலம், நாம் நம்முடைய சூழ்நிலைகளை விட்டு நமது கண்களை திருப்பி தேவனையே நோக்கும்படி நம்மை அழைக்கிறார். தேவனுடைய முடிவில்லா அன்பையும் நம்பிக்கையையும் நாம் என்றென்றும் போற்றும்படியாக அவர் நமக்கு முன் சென்று அன்றிரவு பாடித் துதித்தார்.
தேவனைத் துதிக்கும்பொழுது அவருடைய முடிவில்லா நன்மைகளை நாம் நினைவுகூருகிறோம்.