கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு தொலைவான பகுதியில் மருத்துவ ஊழியம்செய்யும் வாய்ப்பு வந்தபொழுது கைலீ(Kiley) உற்சாகமடைந்த போதிலும் மருத்துவ அனுபவம் எதுவும் தனக்கில்லையே என்று சற்றே கலக்கமடைந்தாள். ஆனாலும் அடிப்படை மருத்துவ உதவியை அவளால் தரமுடியும் என்பதை எண்ணி தைரியமடைந்தாள்.
அங்கு சென்றபொழுது, மிகவும் கொடுமையான ஓர் வியாதியையுடைய ஒரு பெண்ணை சந்தித்தாள். உருக்குலைந்து அழுகிய நிலையிலிருந்த காலைக் கண்டவுடன் கைலீயிக்கு அருவருப்பாக இருந்தது, ஆனாலும் தான் ஏதாவது செய்யவேண்டும் என்பதை அறிந்திருந்தாள். ஆகவே அப்பெண்ணின் காலைத் தொட்டு காயங்களை சுத்தப்படுத்தி கட்ட ஆரம்பித்தாள். அதைக் கண்ட அப்பெண் அழஆரம்பித்தாள். கவலை அடைந்த கைலீ, தான் வலியை ஏற்படுதிவிட்டேனோ என்று அப்பெண்ணிடம் கேட்டபொழுது, “இல்லை, கடந்த ஒன்பது வருடங்களில் இன்றைக்குத் தான் என்னை ஒருவர் தொட்டிருக்கிறார்” என்று அவள் கூறினாள்.
தொழுநோயும் அப்படிப்பட்ட ஒரு வியாதிதான். அதனால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டாலே மக்கள் முகஞ்சுழிப்பதுண்டு. அந்நோய் பரவுவதை தடுக்கும் பொருட்டு “அவர்கள் தனித்து வாழவேண்டும். அவர்கள் கூடார முகாம்களுக்கு வெளியேதான் இருக்கவேண்டும்” என்று பண்டைய யூத கலாச்சாரத்தில் பல கடுமையான சட்டங்கள் இருந்தது (லேவி. 13:46).
அதனால்தான் இயேசுவை நோக்கி வந்த குஷ்டரோகி சொன்ன வார்த்தைகள் மிகவும் விசேஷமானது. அவன் “ஆண்டவரே உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மால் ஆகும்,” என்றான் (மத். 8:2). இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: ‘எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு’ என்றார்” (வச. 3).
தனிமையில் வாழ்ந்துவந்த ஓர் பெண்மணியின் வியாதியுற்ற காலைத் தொட்டதினால் ஓரு இணைப்பை ஏற்படுத்தும் இயேசுவின் பயமற்ற அன்பை கைலீ வெளிப்படுத்தத் தொடங்கினாள். ஓர் சிறிய தொடுதல்தான் இவற்றையெல்லாம் செய்தது.
நமது பயங்களை எல்லாம் தள்ளிவிட்டு தேவன் நம்மைப் பயன்படுத்துவார் என்பதை நாம் விசுவாசித்தால் என்னென்ன மாற்றங்கள் நடைபெறுமோ?