சில கலாச்சாரங்களில், ஒரு அறைக்குள் பிரவேசிக்கும்பொழுது, பெரியவர்கள் உள்ளே சென்றபின் இளையவர்கள் செல்லும்படி எதிர்பார்க்கப்படுகிறது. வேறுசில கலாச்சாரங்களில், மிக முக்கியமான அல்லது உயர் பதவியிலிருக்கிற நபர்கள் முதலாவது உள்ளே செல்வார்கள். இப்படி நமது கலாச்சாரம் எதுவாக இருப்பினும், சில சமயம், முக்கியமான காரியங்களில், வேறு ஒருவரை தேர்வு செய்ய நேர்ந்தால், அதுவும், தேர்வு செய்வதற்கான எல்லாவித உரிமையும் நியாயப்படி நமக்கு இருக்கும் பொழுது வேறு ஒருவரை அனுமதிப்பது நமக்கு சற்று கடினமாக இருக்கிறது.
ஆபிராம் (பின்பு ஆபிரகாம்) மற்றும் அவனுடைய சகோதரனின் மகனாகிய லோத்துவுக்கு அநேக ஆடுமாடுகளும், கூடாரங்களும் இருந்தன. அவர்கள் ஒன்றாகப் பயணித்ததால், அவர்கள் அனைவரையும் போஷிக்க அப்பூமி திணறியது. பிரச்சனையை தவிர்க்க அவனும், லோத்துவும் பிரிந்து போவதே நலமாயிருக்கும் என ஆபிராம் ஆலோசித்து, லோத்து போக நினைக்கும் இடத்தை முதலாவதாக தேர்வு செய்து கொள்ளும்படி கூறினான். உடனே லோத்து செழிப்பான யோர்தான் பள்ளத்தாக்கை தனக்கு தேர்வு செய்து கொண்டு, ஆபிராமிற்கு சாதாரண இடத்தை விட்டுவைத்தான்.
ஆபிராம் லோத்துவைவிட வயதில் பெரியவராக இருப்பினும், இச்சூழலில் தன்னுடைய உரிமைகளை வலியுறுத்தாமல், தன் எதிர்காலத்தை தேவன் பார்த்துக்கொள்வார் என விசுவாசித்தான். “ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும், வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர். இந்த தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான்” (ஆதி. 13:8-9). லோத்துவின் தேர்வு இறுதியில் அவனது முழு குடும்பத்திற்கு மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தியது (ஆதி. 19).
இன்று, நம் வாழ்க்கையில் பல விதமான வாய்ப்புகளை எதிர்கொள்ளும் பொழுது, அவருடைய வழியிலே நம்மை நடத்திச்சென்று ஏற்றதை நாம் தேர்ந்தெடுக்க நம்முடைய பிதா நமக்கு உதவி செய்திடுவார் என்று அவரில் விசுவாசம் கொள்வோமாக. அவர் எப்பொழுதும் நம்மைப் கவனித்து ‘விசாரிப்பதாக’ வாக்குபண்ணியுள்ளார். தேவன் நம்முடைய தேவைகளைச் சந்திப்பார்.
தங்களுடைய தேர்வை தேவனிடம் விட்டுவிடுகிறவர்களுக்கு எப்பொழுதும் தம்முடைய சிறந்ததையே தேவன் அளிப்பார். - ஜிம் எலியட்