ஐந்து நாடுகளிலிருந்து வந்திருந்த குடும்பங்களுக்கு இரவு விருந்தளித்தது எங்களுக்கு என்றும் நீங்கா ஒரு அற்புதமான நினைவு. எப்படியோ அன்று எங்கள் உரையாடல் ஜோடி ஜோடியாக பிரிந்து காணப்படாமல், லண்டன் மாநகரில் வசிப்பதைக் குறித்து உலகத்தின் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்தவர்கள் அவரவருடைய கண்ணோட்டத்தை பகிர்ந்துகொண்டனர். அன்றைய தினத்தின் முடிவிலே அக்கூடுகையை குறித்து நானும், என் கணவரும் சிந்தித்தபொழுது, நாங்கள் அவர்களுக்கு அளித்ததைக் காட்டிலும் பெற்றுக்கொண்டதே அதிகம் என்பதை உணர்ந்தோம். வெவ்வேறு கலாசாரங்களைப் பற்றி அறிந்துக்கொண்டது மட்டுமன்றி, பல புதிய நட்புகள் கிடைத்ததினால் சந்தோஷமும் மனநிறைவும் அடைந்தோம்.

எபிரெய புத்தகத்தின் ஆசிரியர் அப்புத்தகத்தின் முடிவிலே சமுதாய வாழ்விற்கு தேவையான புத்திமதிகளைக் கூறி முடிக்கிறார். அதில், முன்பின் அறியாதவர்களைக் கூட வரவேற்று உபசரிக்கும்படி தன் வாசகர்களுக்கு கூறுகிறார். ஏனெனில் அப்படிச் செய்யும்பொழுது, “சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு,” எனக் கூறுகிறார் (13:2). அவர் ஆபிரகாமையும், சாராளையும் மனதில் வைத்து அப்படிக் கூறியிருக்கலாம். ஏனென்றால் முன்பின் அறியாத மூன்று நபர்களை அவர்கள் வரவேற்று அக்கால வழக்கத்தின்படியே அவர்களுக்கு தாராளமாய் விருந்து அளித்து அனுப்புவதைக் குறித்து ஆதியாகமத்தில் காணலாம் (18:1-12). ஆபிரகாமும், சாராளும் தங்களுக்கு ஆசீர்வாதமான செய்தியைக் கொண்டுவந்த தேவதூதர்களை உபசரித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் அறியாதிருந்தார்கள்.

ஏதாவதொரு ஆதாயத்தை பெற்றுக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தோடு நாம் பிறரை நம் வீட்டில் உபசரிக்கக்கூடாது, ஆனாலும் அநேகந்தரம், நாம் கொடுப்பதைக்காட்டிலும் அதிகமாகவே பெற்றுக்கொள்கிறோம். கர்த்தர் நமக்கு அளித்த நல்வரவை நாம் பிறர்க்கு அளிக்கும் பொழுது, அவர் தம்முடைய அன்பை நம்மூலம் பரந்து விரிந்திடச் செய்வார்.