பல வருடங்களுக்கு முன்பு நானும், என்னுடைய நண்பரும் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது, தீடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. நாங்கள் அருகில் உள்ள ஒரு தோப்பில் ஒதுங்கி நின்றோம். மழை விடாமல் பெய்து கொண்டிருந்தபடியால், பேசாமல் கிளம்புவதே நன்று என முடிவு செய்து, எங்கள் வண்டியை நோக்கி ஓடினோம். வண்டியை அடைந்து கதவைத் திறந்தபொழுது, நாங்கள் நின்றுகொண்டிருந்த அத்தோப்பின் மீது பலத்த இடி ஓசையுடன் மின்னல் வெட்டி அக்கினி பந்தாக விழுந்தது. அதன் விளைவாக அம்மரங்களின் இலைகளும் பட்டைகளும் உரிந்து விழுந்து கொஞ்சம் கிளைகள் மாத்திரமே மிஞ்சியது. அதுவும் புகைந்து கொண்டிருந்தது. பின்பு அமைதி நிலவியது.
இக்காட்சியை கண்டு நாங்கள் பிரமித்து நடுங்கிக் கொண்டிருந்தோம்.
எங்கள் இடாஹோ (Idaho) பள்ளத்தாக்கில் மின்னல்வெட்டுக்களையும், இடியோசைகளையும் காணலாம். மயிரிழையில் உயிர்பிழைத்திருந்தாலும், அவை எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த அதீத சக்தி எனக்கு மிகவும் பிடிக்கும். மின்சக்தி! அதிர்வு! அதிர்ச்சி மற்றும் பிரமிப்பு! இவை அனைத்தும் எனக்கு பிடிக்கும். பூமியும், அதிலுள்ள அனைத்தும் நடுநடுங்குகின்றன. ஆனால் இவை அனைத்திற்கும் பின் அமைதி நிலவுகிறது.
இடியும் மின்னலும் தேவனுடைய சத்தத்திற்கு அடையளமாய் இருப்பதினாலேயே எனக்கு அவை மிகவும் பிடிக்கும் (யோபு 37:4). அவர் தம்முடைய வார்த்தையின் மூலம் தம்முடைய அளவற்ற மகிமையையும், வல்லமையையும் வெளிப்படுத்துகிறார். “கர்த்தருடைய சத்தம் அக்கினி ஜூவாலைகளை பிளக்கும்.. கர்த்தர் தமது ஜனத்திற்கு பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்கு சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்” (சங். 29:7,11). நாம் பொறுமையோடிருக்கவும், அன்பாக இருக்கவும், சகித்துக் கொள்ளவும், அமைதியாக அமர்ந்திருக்கவும், எழுந்து செல்லவும் அல்லது ஒன்றுமே செய்யாமலிருக்கவும் அவர் நமக்கு பெலனளிப்பார்.
சமாதானத்தின் தேவன் உம்மோடு கூட இருப்பாராக.
விசுவாசம் நம்முடைய பெலவீனங்களை தேவனுடைய பெலத்தோடு இணைக்கிறது.