கிறிஸ்துமஸிற்காக தங்கள் ஆலயத்தை அலங்கரிக்கும் பொறுப்பை பெற்ற சிலர் அந்த வருடம் ஓர் புதுமையான வழியை கையாண்டனர். “கிறிஸ்துமஸ் பட்டியல்” என்ற கருப் பொருளின் அடிப்படையில் அலங்கரித்தனர். தங்கம் மற்றும் வெள்ளி நிறத்தில் ஜொலிக்கும் பொருட்களைக் கொண்டு அலங்கரிக்காமல், ஒவ்வொரு நபரிடமும் ஓர் சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் ஒரு சீட்டை கொடுத்தனர். இயேசுவிடத்திலிருந்து என்ன பரிசு வேண்டும் என்று ஒரு பக்கத்திலும், பின்பக்கத்தில் அவருடைய பிறப்பைக் கொண்டாடி அங்கீகரிக்கும் விதத்தில் அவருக்கு என்ன பரிசு கொடுக்க போகின்றனர் என்றும் எழுதவேண்டும். அதை வைத்து ஆலயத்தை அலங்கரிக்க எண்ணினர்.
நீங்கள் இதை செய்வீர்களானால் என்ன பரிசைக் கேட்பீர்கள், எதைக் கொடுப்பீர்கள்? வேதாகமத்தில் அநேக யோசனைகளைக் காணலாம். தேவன் நம்முடைய எல்லா தேவைகளையும் சந்திப்பதாக வாக்களித்துள்ளார். அதனால் நாம் ஓர் புதிய வேலையைக் கேட்கலாம், பணத் தேவைகளை சந்திக்கும்படியாகவும், நம்முடைய அல்லது மற்றவருடைய சரீர சுகத்திற்காகவும், குடும்பங்களில் நல்லுறவு மேம்படவும் நாம் வேண்டிக்கொள்ளலாம். மேலும் தேவனுடைய பணியைச் செய்ய நமக்கு கொடுக்கப்பட்ட ஆவிக்குரிய பரிசு என்ன என்று நாம் எண்ணலாம். அவற்றில் பல ரோமர் 12 மற்றும் 1 கொரிந்தியர் 12ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் என்னும் ஆவியின் கனி நம்வாழ்வில் இன்னும் அதிகமாக வெளிப்பட விரும்புவோம் (கலா. 5:22-23).
அவரிடமிருந்து நாம் பெற்றுக் கொள்ளக்கூடிய மிகச்சிறந்த பரிசு – தேவனின் ஈவாகிய குமாரனும் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்து தான். அவரின் மூலம் பாவ மன்னிப்பையும், மறுசீரமைக்கப்பட்ட வாழ்க்கையையும், சதாகாலமும் நீடிக்கும் நித்திய வாழ்வின் வாக்குறுதியையும் நாம் பெற்றிருக்கிறோம். ஆகவே அவருக்கு நம்மால் தரக்கூடிய மிகச் சிறந்த பரிசு என்னவென்றால் நம்முடைய இருதயம் தான்.
நான் ஓர் ஞானியென்றால், நான் என் பங்கைச் செய்வேன். ஆனாலும் கூட அவருக்கு எதை தரமுடியும் என் இருதயத்தை தவிர? - கிறிஸ்டினா ஜி ரோஸெட்டி (Christina G Rossetti)