“டிசம்பர் மாதத்தை கடந்து விட்டால்,” என்கிற மெர்லி ஆகர்ட் (Merle Haggard) உடைய பழைய பாடல், வேலை இழந்த ஒரு மனிதன் தன்னுடைய மகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பரிசுப்பொருட்கள் எதுவும் வாங்கி கொடுக்க முடியாத நிலையை விவரிக்கிறது. வருடத்தின் சந்தோஷமான மாதமாக இருக்க வேண்டிய டிசம்பர் மாதம், அவருக்கு மகிழ்ச்சியற்ற இருளான மாதமாக இருக்கிறது.
சோர்வு என்பது டிசம்பர் மாதத்திற்கே உரியது இல்லை. ஆனால், அம்மாதத்திலே அது பெரியதாக மாறிவிடலாம். ஏனெனில் நம்முடைய எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் பொழுது, துயரமும் மிக ஆழமாக இருக்கிறது. அப்பொழுது, கிடைக்கும் சிறிதளவு ஊக்கமும் நாம் வெகு தூரத்தை கடந்துச் செல்ல உதவும்.
இயேசுவைப் பின்பற்றிய முன்னோடிகளில் ஒருவன் சீப்புருதீவு ஊரானாகிய, யோசே. அப்போஸ்தலர்கள் இவனை பர்னபாஸ் என்று அழைத்தனர். அதாவது “ஆறுதலின் மகன்” என்று அர்த்தம். அவனைத்தான் நாம் அப்போஸ்தலர் 4:36-37 வசனங்களில், தன் நிலத்தை விற்று, மற்ற விசுவாசிகளின் தேவைக்காக நன்கொடை கொடுக்கக் கண்டோம்.
இதற்கு பின்பு, சவுலை குறிப்பிடும் பொழுது, சீஷர்கள் அவனைக் குறித்து பயந்தார்கள் என வாசிக்கலாம் (அப். 9:26). “அப்பொழுது பர்னபா…, அப்போஸ்தலரிடத்தில் சவுலை அழைத்துக் கொண்டுபோய்” (வச. 27) எனக் காண்கிறோம். பவுல் என பின்பு அழைக்கப்பெற்ற சவுல், முன்பு விசுவாசிகளைக் கொலை செய்யும்படி சுற்றித்திரிந்தவன். ஆனால் பர்னபா கிறிஸ்துவினால் மறுரூபமாக்கப்பட்ட சவுலுக்காகப் பரிந்து பேசினான்.
நம்மை சுற்றி அநேகர் ஆறுதலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். நேரத்திற்கேற்ற ஒரு வார்த்தை, அல்லது ஒரு தொலைபேசி அழைப்பு அல்லது ஒரு ஜெபம் கிறிஸ்துவுக்குள் அவர்களுடைய விசுவாசத்தை பெலப்படுத்தும்.
பர்னபாவுடைய பெருந்தன்மையும், ஆதரவும், ஒரு ஆறுதலின் மகளாக அல்லது மகனாக இருப்பது எப்படி என்பதை வெளிப்படுத்துகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையிலே மற்றவர்களுக்கு நாம் கொடுக்கக் கூடிய மிகப்பெரிய பரிசு இதுவே.
பிறரை ஊக்கப்படுத்துவதே நாம் கொடுக்கக்கூடிய
சிறந்த கிறிஸ்துமஸ் பரிசாக இருக்கலாம்.