நீங்கள் எப்பொழுதாவது உங்களிடமே பேசிக்கொள்வதுண்டா? நான் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது சில சமயங்களில் அவ்வேலையிலுள்ள தவறுகளை சரி செய்வதற்கான வாய்ப்புகளை சத்தமாக நான் என்னிடமே சொல்லிக்கொள்வேன். பொதுவாக நான் என் கார் இஞ்சின் மூடிக்கடியில் (Bonnet / hood) இருக்கும் பொழுது இது நடக்கும். நம்மிடமே நாம் பேசிக்கொள்ளும் பழக்கம் அன்றாட வழக்கமாக நம் அனைவருக்கும் இருந்தாலும், என்னுடைய ‘உரையாடலை’ யாரவது கேட்க நேர்ந்தால் எனக்கு சங்கடமாக இருக்கும்.
சங்கீதப் புஸ்தகத்திலுள்ள சங்கீதக்காரர்கள் பொதுவாக அவர்களிடமே அவர்கள் பேசிக்கொள்வார்கள். 116வது சங்கீதத்தின் ஆசிரியரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஏழாம் வசனத்தில், “என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு” என்று எழுதுகிறார். கடந்த காலத்திலே தேவன் தமக்கு பாராட்டின கிருபையையும், நீதியையும் தனக்குத்தானே நினைவூட்டிக் கொள்வது நிகழ்காலத்திற்கு ஏற்ற ஆறுதலும், துணையுமாகும். இப்படிப்பட்ட “உரையாடல்களை” நாம் அதிகமாக சங்கீதப் புஸ்தகத்தில் காணலாம். 103வது சங்கீதத்தில், தாவீது, “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி
(வச. 1) என்று தன்னிடமே கூறிக்கொள்கிறான். மேலும், 62ம் சங்கீதம் 5ம் வசனத்திலே, “என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்” என்று தன்னைத்தானே திடப்படுத்துகிறார்.
தேவன் உண்மையுள்ளவர் என்பதையும், அவரின் மேல் உள்ள நம்முடைய நம்பிக்கையையும் நமக்கு நாமே நினைவுகூர்வது நல்லது. சங்கீதக்காரனைப் பின்பற்றி, கர்த்தர் நமக்கு செய்த நன்மைகளை சொல்லி நன்றி செலுத்தலாம். அப்படி செய்யும் பொழுது, நாம் பெலனடைவோம். கடந்த காலத்திலே நமக்கு உண்மையுள்ளவராய் இருந்த தேவன், நம்முடைய எதிர்காலத்திலும் அவருடைய அன்பை விளங்கச் செய்வார்.
தேவனுடைய நன்மைகளை நாம் நினைவு கூரும் பொழுது,
அவருடைய சமாதானம் நம்மை நிரப்புகிறது.