ஒரு கிறிஸ்தவப் பத்திரிக்கைக்கு இளநிலை உதவியாளராக நான் பணியாற்றி வந்தபொழுது, கிறிஸ்தவனாக மாறின ஒருவரைப்பற்றிய கதையை அதில் எழுதினேன். ஆச்சரியப்படத்தக்க விதமாக, அவன் அவனது பழைய வாழ்க்கையை முற்றிலுமாக விட்டுவிட்டு, இயேசுவை அவனுடைய புதிய எஜமானாக ஏற்றுக்கொண்டான். அந்தப் பத்திரிக்கை வெளியான சில நாட்களில், “டார்மனி, ஜாக்கிரதையாக இருங்கள், நாங்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட கதைகளை நீங்கள் எழுதினால், இந்த ஊரில் உங்கள் உயிருக்கு ஆபத்துள்ளது,” என்று பெயர் அறிவிக்கப்படாத ஒருவர் என்னை தொலைபேசியில் கூப்பிட்டு பயமுறுத்தினார்.
மக்களுக்கு கிறிஸ்துவை அறிவித்ததினால் நான் பயமுறுத்தப்பட்டது, அது முதல் தடவை அல்ல. ஒருமுறை நான் கிறிஸ்துவைப் பற்றிய கைப்பிரதியை, ஒரு மனிதனிடம் கொடுத்தபொழுது உடனே என் கைப்பிரதிகளோடே ஓடிவிடாவிட்டால் விளைவுகள் வேறாக இருக்குமென்று அவன் பயமுறுத்தினான். அந்த இரு தடவைகளிலும் நான் பயத்தினால் பின் வாங்கினேன். ஆனால், இவை வார்த்தைகளினால் உண்டாக்கப்பட்ட பயமுறுத்தல்கள்தான். அநேக கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட பயமுறுத்தல்களை சந்தித்து வருகின்றனர். சில சமயங்களில் மிகச் சாதாரணமாக தெய்வ பக்தியுள்ள வாழ்க்கையை நடத்துவதுகூட மக்களிடம் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியதுள்ளது.
“நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளை யெல்லாம் நீ பேசுவாயாக” (எரே. 1:7) என்று கர்த்தர் எரேமியாவிடம் கூறினார். இயேசுவும் சீஷர்களிடம் “ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்” (மத். 10:16) என்று கூறினார். ஆம், நாம் பயமுறுத்தல்களையும், வாழ்க்கைப் பிரச்சனைகளையும், துன்புறுத்தல்களையும், வேதனைகளையும் கூட அனுபவிக்கலாம். ஆனால் “நான் உன்னுடனே இருக்கிறேன்”(எரேமியா 1:8) என்று தேவன் எரேமியாவிடம் உறுதிபடக் கூறுகிறார். அப்படியே இயேசுவும் “சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத். 28:20) என்று அவரைப் பின்பற்றினவர்களிடம் உறுதியுடன் கூறினார்.
கர்த்தருக்காக வாழ நாம் முயற்சி எடுக்கும்பொழுது, எந்த விதமான கஷ்டங்களை சந்தித்தாலும் கர்த்தருடைய பிரசன்னம் எப்பொழுதும் நம்முடன் கூட இருக்கிறது என்பதை நாம் நம்பலாம்.
நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
மத்தேயு 5:10