ஜோய், சிறுவர்களுக்கான நிகழ்ச்சியை ஜெபத்துடன் ஆரம்பித்தாள். சிறு பிள்ளைகளுடன் சேர்ந்து பாட்டுக்களைப் பாடினாள். ஆரோன் என்பவரை அச்சிறுவர்களுக்கான ஆசிரியர் என்று ஜோய் அறிமுகப்படுத்திவிட்டு மறுபடியும் ஜெபித்தபொழுது, 6 வயது இம்மானுவேல் அவனது இருக்கையில் நெளிந்து கொண்டிருந்தான். பின்பு ஆரோன் பேசத்துவங்கி, பேச்சை ஜெபத்தோடு ஆரம்பித்து ஜெபத்தோடு முடித்தான். உடனே இம்மானுவேல், “இத்துடன் இது நாலாவது ஜெபம். அவ்வளவு நேரம் என்னால் இருக்கையில் அமர்ந்திருக்க இயலாது” என்று புகார் செய்தான்.
இம்மானுவேலுக்கு இருந்த நிலை கடினமானதுதான் என்று நீங்கள் எண்ணினால், “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்,” என்று 1 தெசலோனிக்கேயர் 5:17ல் கூறப்பட்டதைக் கவனியுங்கள். அல்லது எப்பொழுதும் ஜெப ஆவியுடன் இருங்கள் என்பதையும் கவனியுங்கள். பெரியவர்களாகிய நம்மில் சிலருக்குக் கூட ஜெபம் சலிப்புண்டாக்கும் செயலாக இருக்கலாம். ஏனென்றால் நாம் ஜெபத்தில் கூறவேண்டிய காரியங்களை அறியாமல் இருக்கலாம். அல்லது ஜெபம் என்பது நாம் நம்முடைய பரலோகப் பிதாவுடன் உரையாடும் நிகழ்ச்சி என்று அறியாமல் கூட இருக்கலாம்.
17ம் நூற்றாண்டில், ஃபிராங்காயிஸ் ஃபெனிலோன் ஜெபத்தைப்பற்றி எழுதிய சில வார்த்தைகள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தன. “ஒரு சிநேகிதனிடம் உங்களது இருதயத்திலுள்ள பாரங்களை அதாவது, உங்கள் உள்ளத்திலுள்ள சந்தோஷமான, வேதனையான காரியங்கள் அனைத்தையும் கூறுவதுபோல தேவனிடம் கூறுங்கள். உங்களைச் சோதிக்கும் சோதனைகளை அவரிடம் கூறுங்கள். அவர் அவைகளிலிருந்து உங்களை மறைத்துப் பாதுகாப்பார். உங்களது இருதயத்திலுள்ள காயங்களை அவரிடத்தில் காண்பியுங்கள். அவர் உங்களது காயங்களைக் குணப்படுத்துவார். இப்படியாக உங்கள் பலவீனங்கள், தேவைகள், கஷ்டங்கள் அனைத்தையும் அவரிடம் ஊற்றும்போது, ஜெபத்தில் என்ன கூறவேண்டும் என்பதற்கு குறைவே இருக்காது.”
ஜெபம், என்பது நாம் நமது தேவனோடு செய்யும் மிகவும் நெருக்கமான உரையாடலாகும்.