கானாவிலுள்ள அக்காரா நகரில் நடந்த போக்குவரத்து சண்டைகளுக்கு, வாடகைக் கார் (taxi) மற்றும் சிற்றுந்து (mini bus) ஓட்டும் வாகன ஓட்டிகள் மத்தியில் காணப்பட்ட கவனமற்ற முறையில் காரை ஓட்டுதல், வெப்பநிலை உயர்வினால் ஏற்படும் எரிச்சல், மேலும் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பேசுதல் போன்ற செயல்களே காரணங்களாக இருந்தன. ஆனால், போக்குவரத்தில் நான் கண்ட ஒரு நிகழ்ச்சி வேறுபட்ட விளைவை உண்டுபண்ணினது. ஒரு வாடகைக்காரை கவனமற்று ஓட்டிவந்த ஓட்டுநர் கிட்டத்தட்ட ஒர்  பேருந்தின்மேல் மோதி விட்டான். அந்தப் பேருந்து ஓட்டுநர் கோபப்பட்டு வாடகைக் கார் ஓட்டுநரை சத்தமாக திட்டப்போகிறான் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, முகத்தில் ஏற்பட்ட கோப உணர்வை மாற்றி தவறுபுரிந்த வாகன ஓட்டியைப் பார்த்து மலர்ந்த முகத்துடன் சிரித்தான். அந்தச்சிரிப்பு ஆச்சரியமான விளைவுகளை உண்டுபண்ணினது. அந்த வாடகைக்கார் ஓட்டுநரும் பதிலுக்கு அவனது கைகளை உயர்த்தி, மன்னிப்பு கேட்டு, சிரித்துவிட்டு நகர்ந்து சென்றான். இறுக்கமான சூழ்நிலை தளர்ச்சி அடைந்தது.

சிரிப்பு, நமது மூளையில் ஆச்சரியமான வேதிமாற்றங்களை உண்டுபண்ணுகிறது. நாம் சிரிக்கும்பொழுது, நமது மூளையில் எண்டார்வின் (endorphin ) என்ற வேதிப்பொருள் செலுத்தப்படுகிறது. அது நமது சரீரப்பிரகாரமான சோர்வை தணிக்கும் சக்தி உடையது. சிரிப்பு இறுக்கமான சூழ்நிலையை மாற்றி அமைப்பதோடு, நமக்கு உள்ளாக இருக்கும் மன இறுக்கத்தையும் தளர்வுறச் செய்கிறது. நமது உணர்வுகள் நம்மை மட்டும் அல்லாது நம்மைச் சுற்றியுள்ள பிறரையும் பாதிக்கிறது. “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்த துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து,” (எபே. 4:31–32) என்று வேதாகமம் நமக்குப் போதிக்கிறது.

கோபமோ, மன இறுக்கமோ அல்லது கசப்பான உணர்வுகளோ நமக்கும் தேவனுக்கும், நமக்கும் பிறருக்கும் இடையே உள்ள உறவைப் பாதிப்பதாக இருந்தால் நம்முடைய சொந்த சந்தோஷத்திற்கும், உடல் நலத்திற்கும் “மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்” என்பதை நினைவு கூருவது நல்லது.