எனது சிநேகிதன் பாப் ஹார்னர் “நினைப்பூட்டுவதில் தலைசிறந்தவர்” இயேசு என்று குறிப்பிடுவார். அவர் மிகவும் சரியாகக் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் நாம் மிகவும் சந்தேகப்படுகிறவர்களாகவும், மறக்கும் தன்மையுடையவர்களாகவும் இருக்கிறோம். இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபொழுது, உதவிதேடி அவரிடம் வந்த மக்களின் தேவைகளை அவர் எத்தனையோ முறை சந்தித்திருந்தாலும், அவரது முதன்மைச் சீடர்களே, அவர்களது தேவைகள் சந்திக்கப்படாமல் இருந்து விடுமோ, என்று பயந்தார்கள். அநேக அற்புதங்களை அவர்கள் கண்டிருந்த பின்னும், கர்த்தர், அவர்கள் நினைவு கூர வேண்டுமென்று கருதிய முக்கியமான காரியங்களை அவர்கள் புரிந்துகொள்ள தவறி விட்டார்கள்.

அவர்கள் கலிலேயா கடலில் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, மீதியான அப்பங்களை கொண்டுவர மறந்து போனதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். “நீங்கள் யோசனை பண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா? உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவு கூராமலுமிருக்கிறீர்களா?” (மாற். 8:17–18) என்று இயேசு அவர்களிடம் கேட்டார். ஐந்து அப்பங்களைக்கொண்டு 5000 பேரை போஷித்தபின், மீதமான துணிக்கைகளை அவர்கள் 12 கூடை நிறைய சேகரித்ததை அவர்களுக்கு அவர் நினைப்பூட்டினார். ஏழு அப்பங்களைக் கொண்டு 4000 பேரை போஷித்தபின், மீதமுள்ள துணிக்கைகளால் ஏழு கூடைகளை நிரப்பினார்கள் என்று கூறி “நீங்கள் இன்னமும் உணராதிருப்பது எப்படி” (வச. 21) என்று அவர்களிடம் கூறினார்.

மக்களது சரீரப்பிரகாரமான தேவைகளை சந்தித்த செயல், அவரே உண்மையான ஜீவ அப்பம் என்பதையும், அவர்களுக்காகவும், நமக்காகவும் அவரது சரீரம் “உடைக்கப்படப்” போகிறது என்ற மிகப்பெரிய உண்மையை நமக்கு சுட்டிக் காண்பிப்பதாக உள்ளது.

கர்த்தருடைய பந்தியில் நாம் ஒவ்வொரு முறையும் அப்பத்தைப் பிட்டு, பாத்திரத்தில் பானம்பண்ணும் பொழுதெல்லாம், நம்முடைய கர்த்தரின் மகாப்பெரிய அன்பையும், அவர் நமக்கு அருளும் கிருபைகளையும் குறித்து நினைவுறுத்தப்படுகிறறோம்.