அரசியல் கைதியாக இருந்த வக்லாவ் ஹேவல் 1989ல் செக்கஸ்லோவேக்கியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாக உயர்த்தப்பட்டார். 2011ம் ஆண்டு பராகுவேயில் நடந்த அவரது அடக்க ஆராதனையில் பராகுவேயில் பிறந்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னாள் செயலர் மாடலின் ஆல்பிரைட், ஹேவல், “அந்தகாரத்தில் இருந்தவர்களுக்கு வெளிச்சத்தைப் பிரகாசிக்கப்பண்ணினார்” என்று விவரித்தார்.
செக்கஸ்லோவேக்கியாவில் (பின்னால் செக் குடியரசு) இருந்த அரசியல் சூழ்நிலையில் ஹேவல் எப்படியாக வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்தாரோ, அதுபோல கர்த்தராகிய இயேசு, இந்த உலகம் முழுவதற்கும் ஒளியைக் கொண்டுவந்தார். ஆதியிலே தேவன் இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்தார் (யோவா. 1:2–3; ஆதி. 1:2–3). பின்பு அவரது பிறப்பின் மூலம் ஆவிக்குரிய அந்தகாரத்தில் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்தார். இருளினால் மேற்கொள்ளப்படாத ஜீவனும் ஒளியுமாக இயேசு இருக்கிறார்.
வனாந்திரத்திலிருந்து வந்த யோவான் ஸ்நானகன் இவ்வுலகிற்கு ஒளியாக வந்த இயேசுவைக் குறித்து சாட்சி கொடுக்க வந்தான். அதுபோலவே இன்று நாமும் சாட்சி கொடுக்கலாம். அவ்வாறு சாட்சி கொடுக்கும்படிதான் இயேசு நமக்குக் கூறியுள்ளார். “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத். 5:16).
நம்முடைய இன்றைய உலகில் நன்மை தீமையாகவும், தீமை நன்மையாகவும் கருதப்படுகிறது. உண்மைக்குப் பதிலாக பொய் ஆளுகை செய்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்கள் வாழ்க்கையில் சரியான வழியைத்தேடி அலைகின்றனர். அப்படி வழிதேடி அலையும் மக்களுக்கு, கிறிஸ்துவின் வெளிச்சத்தை அவர்கள் முன் பிரகாசிக்கச் செய்ய வேண்டியவர்களாக நாம் இருப்போமாக.