உங்களது வாழ்க்கையில் மிகச்சிறந்த நாட்கள் கடந்த காலத்தில் இருந்ததா? அல்லது எதிர்காலத்தில் வரப்போகின்றதா? அந்தக் கேள்விக்குரிய பதிலும், வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டமும் காலத்திற்கு ஏற்றபடி மாறுபடும். நாம் இளவயதுடையவர்களாக இருக்கும்பொழுது, நாம், நமது வளர்ச்சியைக் குறித்து எதிர்நோக்குகிறோம். நாம் முதியவர்கள் ஆனபொழுது கடந்த காலத்தை வாஞ்சித்து மறுபடியும் இளமையானவர்களாக மாற விரும்புகிறோம். நாம் எந்த வயதுடையவர்களாக இருந்தாலும், தேவனோடு நடப்பவர்களாக இருந்தால், மேலும் சிறப்பான வாழ்க்கை இனிமேல் தான் வர இருக்கிறது.
மோசேயின் நீண்ட வாழ்நாள் காலத்தில் தேவன் செய்த அநேக அற்புதங்களை அவன் கண்டான். அந்த அற்புதங்களில் அநேக அற்புதங்கள், அவன் வாலிபனாக இருந்தபொழுது நடக்கவில்லை. மோசே, அவனது 80வது வயதில் பார்வோனுக்கு எதிராக நின்றான். தேவன் அவனது மக்களை ஆச்சரியமாக அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்ததைப் பார்த்தான் (யாக். 3–13). மோசே, சிவந்த சமுத்திரம் இரண்டாக பிளந்ததைப் பார்த்தான், வானத்திலிருந்து மன்னா விழுந்ததைப் பார்த்தான். அவன் தேவனோடு “முகமுகமாகப் பேசினான்” (14:21; 16:4; 33:11).
வாழ்நாள் முழுவதும், தேவன் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்போடு மோசே வாழ்ந்தான் (எபி 11:24–27). இப்பூமியில் அவன் வாழ்ந்த நாட்கள் 120 வருஷம். ஆயினும் தேவனோடு கூட அவரது வாழ்க்கை அப்பொழுது தான் துவங்கியுள்ளதாக உணர்ந்தான். தேவனுடைய மகத்துவத்திற்கும், அவருடைய அன்பிற்கும் முடிவே இல்லை என்று அறிந்தான்.
நாம் எந்த வயதுடையவர்களாக இருந்தாலும் “அனாதி தேவனே (நமக்கு) அடைக்கலம் அவருடைய நித்திய புயங்கள் (நமக்கு) ஆதாரம்” (உபா. 33:27). இந்த நம்பிக்கை நம்மை உண்மையாகவே அவருடைய சந்தோஷத்திற்குள் அனுதினமும் வழிநடத்துகிறது.