“மார்க்டைம் மார்ச்” என்ற இராணுவ உத்தரவின் அர்த்தம் என்னவெனில் முன்நோக்கிச் செல்லாமல் நிற்கும் இடத்திலேயே நட என்பதாகும். இது எந்த வித முன்னேற்றமுமின்றி அடுத்து முன்னேறிச் செல்வதற்கான கட்டளையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஓர் செயல் ஆகும்.
அன்றாட வாழ்க்கையிலும் முன்னேறிச் செல்லாத நிலைப்பாடு, எந்தவித நோக்கமும், வேலையும் செய்யாமல், ஆனால் அதே சமயத்தில் காத்திருக்கும் நிலையை “மார்க்டைம்” என்ற பதம் குறிப்பிடுகிறது. இது ஓர் தேக்கமுற்ற வாழ்க்கைச் சூழ்நிலை போன்று காணப்படுகிறது.
இதற்கு எதிர்மாறாக வேதத்தில் நாம் வாசிக்கும் ‘காத்திரு’ என்ற பதம் ஆவலோடு எதிர்பார்த்திருத்தல், நம்புதல், எதிர்பார்த்தல் என்ற அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளது. மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொண்ட பொழுது “என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும். உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்” (சங். 25:2–3) என்று தாவீது எழுதுகிறார். மருத்துவ சோதனையின் பொழுது நமக்கு நோய் உள்ளது என்பதை நாம் அறிவது, பணிக்கான நேர்காணலின் முடிவிற்குக் காத்திருத்தல், நாம் நேசிக்கும் ஒருவரின் வருகைக்குக் காத்திருத்தல் – இது போன்றவற்றிற்கு நாம் எவ்விதம் காத்திருக்க வேண்டும் என்று நாம் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். பயப்படவோ அல்லது உணர்வற்ற நிலையையோ அடையாது, தொடர்ந்து நாம் “இருக்கும் இடத்தில் அணி வகுத்து நின்று” (ஆயத்தமாக நின்று) தேவனுடைய பெலத்தையும், வழிநடத்துதலையும் தீவிரமாகத் தேடவேண்டும்.
கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன் (சங்கீதம் 25:4–5).