வெவ்வேறு பறவை இனங்கள் வாழ்ந்த அடர்ந்த காடுகள் நிறைந்த “கானா நாட்டிலுள்ள” ஒரு கிராமத்தில் நான் வாழ்ந்து வந்ததால் சிறு பிராயத்திலிருந்தே பறவைகளை உற்றுநோக்கி நேசிப்பது எனக்கு விருப்பமாக இருந்தது. அதை என் பழக்கமாக்கிக் கொண்டேன். இப்பொழுது நான் வாழும் புறநகர் பகுதியில் சில காகங்களின் செயல்களை சமீபத்தில் கவனித்த எனக்கு ஓர் ஆவலை உண்டாக்கியது. அவை ஓய்வெடுத்துக் கொள்வதற்காக இலைகள் இல்லாத ஓர் மொட்டை மரத்தை நோக்கிப் பறந்தன. அவை உறுதியான கிளைகளில் அமர்வதற்குப் பதிலாக, அவற்றின் எடையைத் தாங்காமல் வளைந்து ஒடிந்துவிடும் மெல்லிய கிளைகளில் அமர்ந்தன. அவற்றின் எடை தாங்காமல் கொப்புகள் ஒடிந்த போது அவை பறந்து சென்றன. ஆனால் மறுபடியும் மெல்லிய கிளைகளில் உட்கார்ந்து அவற்றை ஒடித்தன. இவ்வாறு மறுபடியும் மறுபடியுமாக இந்த பயனற்ற காரியத்தை செய்ய முயற்சித்தன. உறுதியான மரக்கிளைகள் பாதுகாப்பாக இருப்பதற்கு நம்பத் தகுந்த இடம் என்று அந்த பறவைகளின் அறிவிற்கு எட்டவில்லை என்று தெரிகிறது.
நம்மைப்பற்றிய காரியமென்ன? நமது நம்பிக்கையை எதில் வைத்திருக்கிறோம்? “சிலர் இரதங்களைக்தகுறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்” என்று தாவீது சங்கீதம் 20:7ல் கூறுகிறார். இரதங்களும் குதிரைகளும் உலகக்காரியங்களையும், ஆஸ்தியையும் குறிக்கின்றன. இவை நமது அன்றாட தேவைகளைச் சந்திக்கப் பயன்படுமே தவிர ஆபத்துக்காலத்தில் நமக்குப் பாதுகாப்பைத் தராது. இப்படிப்பட்ட பொருட்களான நமது உடைமைகள், ஆஸ்திகள் மீது நமது நம்பிக்கையை வைத்தோமானால், அவை இறுதியாக அந்த காக்கைகள் அமர்ந்த மெல்லிய கிளைகள் ஒடிந்து, அந்தக் காக்கைகளை கீழே தள்ளியது போல், நம்மையும் கீழே விழத்தள்ளும்.
இரதங்களையும், குதிரையும் நம்பினவர்கள் “முறிந்து விழுந்தார்கள்”, ஆனால் தேவனில் நம்பிக்கை வைத்தவர்கள் “எழுந்து நிமிர்ந்து நிற்பார்கள்” (சங். 20:8).