1891ம் ஆண்டு பிட்டி மேசன் அடையாளம் கண்டுகொள்ள முடியாத கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டாள். அடிமையாகப் பிறந்த ஓர் பெண்ணிற்கு இவ்வாறு நடப்பது ஓர் அசாதாரணமான காரியம் அல்ல. ஆனால் பிட்டியைப் போல பல சிறந்த சாதனைகளைப் புரிந்த பெண்ணிற்கு இவ்வாறு நடந்தது சற்று சிந்திக்க வேண்டிய ஒரு காரியமே. 1856ம் ஆண்டு நீதிமன்றத்தில் போராடி தனக்கு சுதந்தரத்தை வெற்றிகரமாகப் பெற்றபின், வியாபாரத்தில் சிறந்த தீர்மானங்களை எடுக்கும் திறமையுடன் சிறந்த செவிலியாகப் பணிபுரியும் திறமையும் சேர்ந்ததால் நன்கு உழைத்து செல்வத்தைத் திரட்டினாள். தங்கள் நாட்டை விட்டு, பிற நாடுகளுக்கு குடியேறுபவர்களின், மற்றும் சிறைக் கைதிகளின் மோசமான நிலையைக் கண்ணுற்று, அவர்களுக்கு தாராளமாக உதவிக்கரம் நீட்டினாள். இதனால் ஒரு கூட்டம் மக்கள் எப்பொழுதும் அவள் வீட்டின் முன் வரிசையாக நின்று உதவிபெற்றுச் சென்றனர். அடிமைத்தனத்திலிருந்து வெளிவந்து 1872ல் பதினாறு வருடங்களே ஆனநிலையில் அவளும், அவள் மருமகனும் லாஸ் ஏஞ்சல்ஸில் முதல் ஆப்பிரிக்க மெதடிஸ்ட் எப்பிஸ்கோப்பல் திருச்சபையை நிறுவ நிதி உதவி செய்தனர்.
இப்படி பிரயாசப்பட்டு பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் (அப். 20:35) என்று பவுல் அப்போஸ்தலன் கூறிய வார்த்தைகளுக்கு பிட்டி இலக்கணமாகத் திகழ்ந்தார். பவுல் அடிமை அல்ல, சுயாதீனமுள்ள, வசதிபடைத்த பின்னணியத்திலிருந்து வந்தவராக இருந்தாலும், கிறிஸ்துவுக்கும், பிறருக்கும் சேவை செய்வதால் கிடைக்கும் சிறையிருப்பையும், இரத்தசாட்சியாய் வாழ்வதையுமே தெரிந்து கொண்டார்.
1988ம் ஆண்டு பிட்டியின் ஆதரவாளர்கள் பிட்டி மேசனுக்கு ஓர் கல்லறைக் ஞாபகார்த்த கல்லை வைத்தார்கள். அக்கூட்டத்தில் லாஸ் ஏஞ்சல்ஸின் மேயரும், ஓர் நூற்றாண்டுக்கு முன்னர் அவள் வீட்டில் துவங்கப்பட்ட ஓர் சிற்றாலயத்திலிருந்து 3000 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். “தாராளமாகக் கொடுக்கும் கை ஆசீர்வதிக்கப்பட்டது. அது தான் பெற்றுக்கொள்வதற்கும் அதிகமாய் கொடுக்கிறது”. மனமுவந்து தாராளமாய் கொடுத்த கரம், ஓர் வளமான பரம்பரைச் சொத்தைப் பெற்றுக்கொள்கிறது.