உலகிலுள்ள சமயங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டு உலகளாவிய ஒருமைப்பாட்டை உருவாக்க வேண்டும் என்று ஆங்கிலேய கல்வியாளர் ஒருவர் அழைப்பு விடுத்தபொழுது அதை உலகமே புகழ்ந்து வரவேற்றது. “நம்முடைய காலத்தில் நாம் செய்ய வேண்டிய பிரதானமான பணி என்னவென்றால், அனைத்து சமயத்தைச் சார்ந்த மக்களும் ஒன்றிணைந்து சமாதானத்துடனும், ஒருமைப்பாட்டுடனும் இணைந்து வாழவேண்டும்” என்ற முக்கியமான விதிமுறையை பெரும்பான்மையான மதங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதை அந்த கல்வியாளர் சுட்டிக்காட்டினார்.
இயேசு தமது மலைப்பிரசங்கத்தில் ஒரு முக்கியமான விதிமுறையைக் கூறினார். “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்பதே அது (மத். 7:12). மேலும் அதே பிரசங்கத்தில் “உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்… உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்” (மத். 5:44) என்று கூறினார்.
இப்படிப்பட்ட அடிப்படை விதிமுறைகளைச் செயல்படுத்தினால் அவை சமாதானத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் நேராக வழிநடத்தும். ஆனால் இந்த முக்கியமான விதிமுறையைத் தொடர்ந்து பகுத்தறிந்து செயல்பட வேண்டும் என்றும் கூறுகிறார். கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்” என்று எச்சரிக்கிறார் (மத். 7:15). பிறரை மதிப்பதும், சத்தியத்தைப் பகுத்தறிவதும் ஒன்றோடொன்று இணைந்து செல்லும். சத்தியத்தை அறிந்திருந்தோமானால் எடுத்துரைப்பதற்கு உகந்த ஓர் நற்செய்தியும் நம்மிடம் காணப்படும். ஆனால் தேவன் ஒவ்வொருவருக்கும் அவரை ஏற்றுக்கொள்ளவோ, அல்லது புறக்கணிப்பதற்கோ உரிமையைத் தந்திருக்கிறார். அன்புடன் பிறருக்கு சத்தியத்தை எடுத்துக்கூற வேண்டியது நமது கடமை. தேவன் செயல்படுவதுபோல, அவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை மதித்து அவர்களின் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டும்.
பிறர் நம்மை மதிப்பதை ஆதாயப்படுத்திக்கொள்ள வேண்டுமானால் நாம் அவர்களை மதிக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஓர் காரியம். “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்” (யோவா. 14:6) என்று இயேசு கூறிய நற்செய்தியை அறிவிக்க அவ்வாறு நாம் பிறரை மதித்து நடப்பது என்பது நமக்கு கிடைக்கும் தருணத்தை ஆதாயப்படுத்திக்கொள்ள ஓர் சிறந்த வழியாகும்.