மி’அஸ்யா மிகவும் நடுக்கத்துடன் மேடையை நோக்கி நடந்துசென்று, தன் முப்பது சக மாணவர்கள், அவர்கள் பெற்றோர் முன்னிலையில் ஐந்தாவது வகுப்பு பட்டமளிப்பு விழாவில் பேசப்போவதை அனைவரும் கவனித்துக்கொண்டிருந்தார்கள். பள்ளி முதல்வர் ஒலிப்பெருக்கியை மி’அஸ்யாவின் உயரத்திற்கு ஏற்றாற்போல் சீர்செய்து வைத்தபொழுது, ஒலிப்பெருக்கிக்கும், பார்வையாளர்களுக்கும் தன் முதுகைக்காட்டி மறுபுறம் திருப்பிக்கொண்டார். “தேன் போன்று இனிமையானவளே பயப்படாதே, உன்னால் பேசமுடியும், பேசு” என்று கூட்டத்தில் இருந்த அனைவரும் அவளை உற்சாகப்படுத்தினார்கள். ஆனால் அவளோ சிறிதும் அசையவில்லை. அப்பொழுது அவள் சகமாணவி மேலே சென்று அவளருகே நின்றுகொண்டாள். முதல்வர் ஒருபுறமும், மி’அஸியாவின் சிநேகிதி மறுபுறமும் நின்றுகொண்டு மூவரும் ஒருமிக்க அவள் பேசுவதற்கு எழுதியிருந்ததை வாசித்தார்கள். ஆதரவு கொடுப்பது என்பதற்கு இது எவ்வளவு அருமையான ஓர் உதாரணம்!
அமலேக்கியர்களுடன் நடந்த போரின் மத்தியில் மோசேக்கு உதவியும், ஆதரவும் தேவைப்பட்டது (யாத். 17:10–16). மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில் இஸ்ரவேலர்கள் மேற்கொண்டார்கள். அவன் தன் கையை தாழவிடுகையில் அமலேக்கு மேற்கொண்டான் (வச.11). ஆரோனும், ஊரும் என்ன நடக்கிறது என்று பார்த்ததினால் அவர்கள் மோசேக்கு அருகாமையில் நின்று, “ஒருவன் ஒருபக்கத்திலும் ஒருவன் மறுபக்கத்திலும்” இருந்து சோர்ந்துபோன அவன் கையைத் தாங்கினார்கள். இவ்வாறு அவர்கள் அவனை தாங்கியதால் சூரிய அஸ்தமனத்தின்போது வெற்றி பெற்றார்கள்.
ஒருவரையொருவர் தாங்குவது நம் அனைவருக்கும் அவசியமான ஒன்றாகக் காணப்படுகிறது. தேவனின் குடும்பத்தில் சகோதர சகோதரிகளாக நாம் பயணிக்கும் இந்த விசுவாசப் பயணத்தில் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்த அநேக சந்தர்ப்பங்கள் நமக்கு உண்டு. அதை செய்து நிறைவேற்ற தேவன் உண்மையிலேயே நம் மத்தியில் உலாவி தம் கிருபையைப் பொழிகிறார்.