எங்கள் நாட்டிலுள்ள ஓர் பெண்கள் ஐக்கிய ஜெபக்குழு கானாவுக்காகவும், இதர ஆப்பிரிக்க நாடுகளுக்காகவும் தொடர்ந்து இடைவிடாது மாதாமாதம் கூடி ஜெபித்து வருகிறார்கள். ஏன் இவ்வாறு தேசங்களுக்காக இடைவிடாது அவர்கள் ஜெபிக்கிறார்கள் என்று கேட்டபொழுது, சுற்றிலும் பாருங்கள், செய்திகளை கவனித்துக் கேளுங்கள். போர், பேரழிவுகள், நோய்கள், வன்முறைகள் போன்றவை மனுக்குலத்திற்காக தேவன் கொண்டுள்ள அன்பையும், நம்மீது இருக்கும் ஆசீர்வாதங்களுக்கும் தடையாக மூடி மறைத்துக்கொண்டிருக்கின்றன. இதனால் நம் தேசங்கள் பாழாகின்றன. தேசங்களின் காரியங்களில் தேவன் இடைபட்டு செயல்படுகிறார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். ஆகவே அவருடைய ஆசீர்வாதங்களுக்காக அவரை ஸ்தோத்தரித்து, அவர் இடைபட்டு கிரியை செய்ய வேண்டுமென்று கத்தி ஜெபிக்கிறோம் என்று அந்த ஜெபக்குழு தலைவி கிஃப்டி டாட்சி பதிலுரைத்தார். உண்மையாகவே தேவன் தேசத்தில் நடக்கும் காரியங்களில் இடைபட்டு செயல்படுகிறார் என்று வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது (2 நாளா. 7:14). இவ்வாறு தேவன் இடைபடும்பொழுது அவர் சாதாரண மக்களையே பயன்படுத்துகிறார். அதற்காக அவர் மாபெரும் பணிகளைச் செய்ய வேண்டுமென்று கூற மாட்டார். ஆனால் தேசத்தில் சமாதானத்தையும், நீதியையும் கட்டளையிட்டு தேசத்திற்கு ஷேமத்தைக் கொடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாரோ அதை செய்து அவருக்கு உதவ வேண்டும் (நீதி. 14:34). ஜெபத்தின் மூலமாக நாம் அந்த உதவியைச் செய்யலாம். “நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள
ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காவும் அப்படியே செய்யவேண்டும்” (1 தீமோ. 2:1–2) என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார்.
பண்டைய இஸ்ரவேலரை “எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்”, என்று (சங்கீதம் 122:6) சங்கீதக்காரன் கூறுவதுபோல நாமும் நமது தேசத்தின் சமாதானத்திற்காகவும், ஷேமத்திற்காகவும் வேண்டிக்கொள்ள வேண்டும். நாம் நம்மைத் தாழ்த்தி பொல்லாத வழிகளைவிட்டு திரும்பி, தேவனுடைய முகத்தைத் தேடினால், அவர் நமது ஜெபத்தைக் கேட்பார்.