நான் சிறுவனாக இருக்கும்பொழுது, மாதந்தோறும் குடும்பமாக ஒகாயோவிலிருந்து மேற்கு வர்ஜீனியாவிலுள்ள எங்கள் தாயின் வழி தாத்தா, பாட்டியைப் பார்க்க பயணம் மேற்கொள்வோம். நாங்கள் ஒவ்வொரு முறையும் பண்ணை வீட்டின் வாசலை அடைந்தவுடன் எங்கள் பாட்டி லெஸ்டர் “உள்ளே வாருங்கள், சிறிது நேரம் உட்காருங்கள்” என்று எங்களை வரவேற்பார்கள். நாங்கள் சிறிது நேரம் வசதியாக உட்கார்ந்து அனைவரையும் ஈர்க்கத்தக்க விதத்தில் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்தில் அவ்வாறு கூறுவார்கள்.
வாழ்க்கை மிக மிக வேகமாக நிற்கக்கூட நேரமின்றி சென்று கொண்டிருக்கலாம். தொழிலையே முக்கியமாகக் கொண்டு செயல்படும் உலகில் மக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது ஓர் கடினமான காரியமாகக் காணப்படுகிறது. “எங்களுடன் சிறிது நேரம் உட்காருங்கள்” என்று ஒருவரிடம் கூறுவது மிகக் கடினமான காரியம். குறுஞ்செய்திகள் மூலம் நாம் அநேகக் காரியங்களைச் செய்து முடிப்பதுடன், எந்தக் காரியத்தை எளிதில் பெறவேண்டுமோ அதை மிக எளிதில் பெற்றுக்கொள்ள முடிகிறது.
ஆனால், ஆயக்காரனுடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த இயேசு விரும்பியபொழுது எவ்வாறு செயல்பட்டார் என்று பாருங்கள். அவர் சகேயுவின் வீட்டிற்குச் சென்று “சிறிது நேரம் உட்கார்ந்தார்”,“இன்றைக்கு நான் உன் வீட்டில் தங்க வேண்டும்” என்று அவர் அவனிடம் கூறியது அவசர அவசரமாக சிறிது நேரம் தங்கிச்செல்லும் காரியத்தைக் குறிக்கவில்லை (லூக். 19:5). இயேசு அவனோடு அதிக நேரத்தை செலவிட்டார். அவ்வாறு அவன் அதிக நேரத்தை இயேசுவுடன் செலவழித்ததால் சகேயுவின் வாழ்க்கைத் தலைகீழாக மாறியது.
என் பாட்டி வீட்டின் முன் தாழ்வாரத்தில் அநேக நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். வரும் விருந்தினர் அனைவரும் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, அமர்ந்து பேசுவதற்கு அன்புடன் அழைப்புக் கொடுக்கப்படும். நாம் ஒருவரைப்பற்றி அறிந்து அவர்கள் வாழ்க்கையில், இயேசு சகேயுவிடம் ஏற்படுத்திய மாற்றத்தைப் போன்றதொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால் நாம் அவர்களை அன்புடன்,“வாருங்கள், சிறிது நேரம் உட்காருங்கள்” என்று வரவேற்று, உட்காரச் சொல்ல வேண்டும்.