பதற்றமான நிலையில், ஓர் பெண் நான் பணிபுரியும் வீட்டு உதவி மையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாள். வீட்டை அனல்மூட்டும் கருவி பழுதடைந்ததால், வாடகைக்குக் குடியிருந்த அவள் வீடு மரக்கலன்கள் (மேஜை, நாற்காலி போன்றவை) கூட பனிக்கட்டி போல் உறைந்து விட்டது. என்ன செய்வது என்று அறியாத நிலையில், தன் குழந்தைகளை அந்தக் குளிரினின்று எவ்வாறு காப்பாற்றுவது என்று கேட்டாள், அலுவலகத்தில் அச்சடிக்கப்பட்டு வைத்திருந்த பதிலை எடுத்து “உடனே ஓர் உணவு விடுதிக்குச் சென்று தங்குங்கள். அதற்கு ஆகும் கட்டண ரசீதை வீட்டுச் சொந்தக்காரருக்கு அனுப்பி வையுங்கள்” என்ற பதிலை அவசரமாகச் சொன்னேன். அதைக் கேட்ட அவள் கோபத்துடன் தொலைபேசியை துண்டித்து விட்டாள்.
நான் உதவி மையத்தில் எப்படிப்பட்ட கேள்விகளுக்கு எவ்வித பதில் அளிக்க வேண்டும் என்று எழுதப்பட்ட பதிலைக் கொடுக்க அறிந்திருந்தேனேயன்றி அவள் உள்ளத்தின் வேதனைகளை ஒரு சிறிதும் அறியாதவனாய் கடினமான பதிலை உரைத்தேன். அவளுடைய பயத்தையும், நம்பிக்கையற்ற நிலையையும் புரிந்து கொள்ளக்கூடிய ஒருவர் தேவைப்பட்டார். அந்த இக்கட்டான சூழ்நிலையில் தன் பயத்தையும், ஒன்றும் செய்ய இயலாத இக்கட்டையும் ஒருவர் அறிந்து ஆறுதல் சொல்லவேண்டுமென்று விரும்பினால். சுருங்கக்கூறின், நான் அவளைக் கடுங்குளிரில் வெட்டவெளியில் தனிமையாக விட்டுவிட்டேன் என்று தான் கூற முடியும்.
யோபு தன் உடைமைகள் அனைத்தையும் இழந்த நிலையில், அவனை சிறிதும் புரிந்து கொள்ளாத நிலையில், அவனைக் குற்றப்படுத்தி பதில் கூறிய நண்பர்கள்தான் அவனுக்கு இருந்தார்கள். யோபு செய்ய வேண்டியது என்னவெனில் தன் முழு மனதுடன் தேவனுக்காக வாழ்ந்திருக்க வேண்டும். “அப்பொழுது உம்முடைய ஆயுட்காலம் பட்டப்பகலைப்போல் பிரகாசமாயிருக்கும்” (யோபு 11:17) என்று சோப்பார் ஆலோசனை கூறினான். அந்த ஆலோசனையை யோபு ஏற்றுக்கொள்ளாமல் மனவேதனையும், கேலியும் கலந்த குரலில் “உங்களுடனே ஞானம் சாகும்” என்று ஏளனமாக பதிலுரைத்தான் (யோபு 12:2). புத்தகங்களில் எழுதிவைக்கப்பட்ட பதில்கள் மக்கள் சந்திக்கும் உண்மையான பிரச்சனைகளுக்கு உகந்தவைகளாக இருக்காது என்பதை நன்கு அறிந்திருந்தான்.
யோபு சந்தித்த மாபெரும் இழப்பை யோபுவின் நண்பர்கள் நன்கு அறிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள் என்று நாம் எளிதாக அவர்களைக் குற்றப்படுத்தி விடலாம். ஆனால் உண்மையிலேயே நம்மால் விளங்கிக்கொள்ள முடியாத கேள்விகளுக்கு அவசரமாக அர்த்தமற்ற பதில்களைப் பல முறை கொடுத்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான பதில் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் அவர்கள் கஷ்டங்களைக் கேட்டு, புரிந்துகொண்டு பதில் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாம் அவர்கள் மீது கரிசனை கொண்டிருக்கிறோமா என்று அறிய விரும்புகிறார்கள்.