பள்ளி ஆண்டில் ஓரு பருவநிலை முடிந்த தருணத்தில் என் மனைவியும், நானும், 100 கிலோ மீட்டர் (60 மைல்) தூரத்திலுள்ள பள்ளியிலிருந்து எங்கள் மகளை அழைத்து வந்தோம். வீட்டிற்குத் திரும்பி வரும் வழியில், சற்று வழிவிலகிச் சென்று அருகாமையில் உள்ள கடற்கரை உணவு விடுதியில் சென்று சிற்றுண்டி அருந்தச் சென்றோம். எங்கள் நேரத்தை மகிழ்ச்சியுடன் கழித்துக் கொண்டிருந்த சமயத்தில், கடற்கரையில் அநேகப் படகுகளைக் கண்டோம். பொதுவாக அவை நீரில் அடித்துச் செல்லாதபடிக்கு நங்கூரமிடப்பட்டிருக்கும். ஆனால் ஓர் படவு மாத்திரம், எவ்விதத் தங்கு தடையுமின்றி மெதுவாக, ஆனால் தொடர்ந்து கடலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன்.
நான் வீட்டை நோக்கி வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த பொழுது, விசுவாசிகளுக்கு எபிரெயர் நிருபத்தில் ஏற்ற வேளையில் கொடுக்கப்பட்டுள்ள எச்சரிப்பைப்பற்றி சிந்தித்தேன். “ஆகையால் நாம் கேட்டவைகளை விட்டு விலகாதபடிக்கு அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்க வேண்டும்” (எபி. 2:1). அப்படி விலகாமலிருப்பதற்கு சிறந்த வழிகள் உண்டு. மோசேயின் நியாயப்பிரமமாணங்களை ஏற்றுக்கொண்டு அவற்றிற்குக் கீழ்ப்படிவது அவசியமானாலும், தேவகுமாரனால் அறிவிக்கப்பட்ட செய்தி அதைவிட மிக மேன்மையானது. கிறிஸ்துவின்மூலமாக நாம் பெற்ற “இவ்வளவு பெரிதான இரட்சிப்பைப்பற்றி” நாம் கவலையற்று இருக்கக்கூடாது (வச.3).
கிறிஸ்துவின் உறவிலிருந்து நாம் விலகிச் செல்வதை முதலில் அறிந்து கொள்ள முடியாது. அது மெல்ல, மெல்ல நடைபெறும். ஆனாலும், ஜெபத்தில் நம் நேரத்தை அவருடன் செலவிடுதல், அவர் வசனத்தை வாசித்தல், நமது தவறுகளை அவரிடம் அறிக்கையிடுதல், இயேசுவைப் பின்பற்றுபவர்களுடன் தொடர்பு கொள்ளுதல் போன்றவை அவரில் உறுதியாய் நிலைத்திருக்க உதவும். நாம் எப்பொழுதும் தேவனுடன் இணைந்திருக்கும் பொழுது நம்மை நிலைநிறுத்த அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். நாமும் வழிவிலகிச் செல்வதைத் தடுக்க முடியும்.