தந்தையர் தினத்தன்று அனுப்பப்படும் வாழ்த்து அட்டையில் இந்த விநோதமான ஒரு   படம் இருந்தது. ஓர் தந்தை ஓர் கையால் புல்வெட்டும் இயந்திரத்தால் வெட்டிக்கொண்டு சென்றபொழுது, மறு கையால் சிறுபிள்ளைகளை வைத்துச் செல்லும் தள்ளுவண்டியை பின்னால் இழுத்துக் கொண்டு சென்றார். தள்ளுவண்டியில் அவருடைய மூன்று வயது மகள் அமர்ந்து கொண்டு தங்களுடைய தோட்டத்தை இயந்திர சத்தத்திற்கிடையில் மகிழ்ச்சியுடன் வலம் வந்தாள். இதுபாதுகாப்பற்ற ஓர் செயலாக இருந்தாலும், ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்ய முடியாது என்று யார் சொல்லக்கூடும்?

உங்களுக்கு ஓர் நல்ல தகப்பன் இருந்தால், மேற்கூறிய காட்சி உங்களுக்கு வினோதமான நினைவுகளை ஞாபகப்படுத்தியிருக்கும். ஆனால் அநேகருக்கு ‘தகப்பன்’ என்ற பதம் ஓர் முற்றுப்பெறாத எண்ணம். நம் தகப்பன்மார் போயிருந்தால்,அல்லது நம்மை ஏமாற்றியிருந்தால், அல்லது நம்மை புண்படுத்தியிருந்தால், நாம் எங்கு போவோம்?

தாவீது அரசன் தகப்பன் என்ற முறையில் குறைவுள்ளவன். ஆனால் தேவனுடைய தந்தைப்பாசம் அவருக்கு நன்றாகவே தெரியும். “தம்முடைய பரிசுத்த ஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்”, தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்துகிறார்” (சங். 68:5,6). பவுல் அப்போஸ்தலன் இக்கருத்திற்கு விளக்கம் கூறுகிறார். “அப்பா, பிதாவே என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்”. இவ்வாறு தகப்பன் என்ற பதத்திற்கு; அராமிக் மொழியில் சிறுபிள்ளைகள் தங்கள் தகப்பனை அழைக்கும் பதமாகிய, “அப்பா, பிதாவே” (ரோம. 8:15) என்று கூப்பிடுவது போல் நாமும் கூப்பிடலாம் என்று கூறுகிறார். இந்த வார்த்தையைத்தான் இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இரவு திகிலுடனும், வேதனையுடனும் தன் தகப்பனை நோக்கி ஜெபித்தபொழுது உபயோகித்தார் (மாற். 14:36).

இயேசு பயன்படுத்திய “அப்பா” என்ற மிக நெருக்கமான வார்த்தையை நாமும் பயன்படுத்தி தேவனண்டை வருவது எவ்வளவு பெரிய சிலாக்கியம்! நமது அப்பா, பிதா, அவரண்டை வருபவர்களை தமது குடும்பத்திற்கு அன்புடன் வரவேற்கிறார்.