ஒரு சிலருடைய வாழ்க்கையில் தேவன் அவர்களுக்குச் செய்த அற்புதங்களைப்பற்றிய சாட்சிகளைக் கேட்கும்பொழுது, அது நமக்கு ஓர் சவாலை ஏற்படுத்தும். ஜெபத்திற்குக் கிடைக்கும் பதில்களைப்பற்றி நாம் கேட்டு, மகிழ்ச்சியுறும் பொழுது, சமீப காலத்தில் ஏன் தேவன் நமக்கு அற்புதங்கள் செய்யவில்லை என்று எண்ணத் தோன்றும்.
ஆபிரகாமுக்கு அதிசயிக்கும் விதங்களில் தன்னை வெளிப்படுத்தினது போல நமக்கும் செய்தால் தேவனுக்கு உண்மையுள்ள ஊழியக்காரர்களாக இருக்க அதிகமாக ஊக்குவிக்கப்படுவோம் என்று நாம் எண்ணுவது சரியே. ஆனால் தேவன் ஆபிரகாமுக்கு 12–14 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் தம்மை வெளிப்படுத்தினார். ஆபிரகாமின் பெரும்பான்மையான பயணம் சாதாரணமானதாகவே காணப்பட்டது (ஆதி. 12:1–4; 15:1–6; 16:16–17:2).
வாழ்க்கையின் சாதாரண நிகழ்ச்சிகளில் தேவன் பொதுவாக திரைமறைவாகவே (நாம் அறியாமலேயே) கிரியை செய்வார். நம் வேதபகுதி கூறுவது போல “உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பித்துக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரி. 10:13). ஒவ்வொரு நாளும் சாத்தான் எய்யும். அக்கினியாஸ்திரங்களிலிருந்து நம்மை பாதுகாக்க தீவிரம் காட்டுகிறார். இல்லாவிட்டால் அவை நம்மை உதவியற்ற நிலைக்குள் தள்ளி தோல்வியுறச் செய்துவிடும். சோதனைகள் நம்மைத் தாக்கும்பொழுது, நாம் எளிதாகத் தப்பித்துக்கொள்ள வழிகளை உருவாக்குகிறார்.
நம் எளிமையான வாழ்க்கையின் மத்தியில் அன்று தேவன் நமக்குப் பாராட்டிய அற்புதங்களை, அன்று இரவு நாம் படுக்கைக்குப் போகுமுன் சிந்தித்து, நன்றி செலுத்த வேண்டும். அதிசயிக்கத்தக்க காரியங்களை உங்களுக்கு தேவன் செய்ய வேண்டும் என்று வாஞ்சிப்பதற்குப் பதிலாக, அவருக்கு நன்றி செலுத்துங்கள்! ஏற்கனவே அவர் உங்களுக்கு அதிசயங்களைச் செய்திருக்கிறார்.