கடந்த ஆண்டு நடந்த புத்துணர்வு முகாமில், நீண்ட நாட்களாக பார்க்காத என் சிநேகிதிகள் சிலரைச் சந்தித்தேன். நாங்கள் மறுபடியுமாக ஒன்றாகச் சேர்ந்ததைக் குறித்து சிரித்து மகிழ்ந்தேன். ஆனால் அவர்கள் நட்பை நீண்ட நாட்கள் இழந்ததினால் அழவும் செய்தேன்.

இறுதி நாளில் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கர்த்தருடைய பந்தியை ஆசரித்தோம். அதிக சிரிப்பும், கண்ணீரும்! எனக்கு நித்திய ஜீவனையும், என் சிநேகிதிகளோடு இருக்க இந்த அருமையான நாட்களைத் தந்த தேவ கிருபையை எண்ணி மகிழ்ச்சியடைந்தேன். என்னைப் பாவத்திலிருந்து விடுவிக்க இயேசு கொடுத்த விலைக்கிரயத்தை எண்ணி மனம் நொந்தவளாய் நான் மறுபடியும் அழுதேன்.

நான் எஸ்றாவையும், அந்த அதிசயிக்கத்தக்க நாளையும் எண்ணிப் பார்த்தேன். சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்தவர்கள் தேவனுடைய ஆலயத்தின் அஸ்திபாரத்தை இப்பொழுதான் கட்டி முடித்திருந்தார்கள். மக்கள் சந்தோஷத்தால் ஆரவாரம் செய்தார்கள். ஆனால் சில வயது முதிர்ந்த ஆசாரியர்கள் அழுதார்கள் (எஸ்றா 3:10–12). ஒருவேளை அவர்கள் சாலமோனின் ஆலயத்தையும், அதன் முந்தைய மகிமையையும் பற்றி மறுபடியும் சிந்தித்திருக்கலாம். அல்லது அவர்கள் செய்த பாவத்தின் விளைவாகத் தாங்கள் சிறைபட்டுப் போனதை எண்ணி வேதனைப்பட்டிருக்கலாமோ?

சில சமயங்களில் நாம் தேவன் கிரியை செய்யும்பொழுது வேறுபட்ட அனுபவங்களின் ஊடே கடந்து செல்லலாம்; உதாரணமாக தேவனுடைய அதிசயங்களைக் காணும்பொழுது சந்தோஷமும், நம் பாவத்தையும், அதற்குப் பரிகாரமாக இயேசு சிலுவையில் பலியானதும் நமக்குத் தேவை என்று எண்ணும்பொழுது வேதனையும் அடைகிறோம்.

இஸ்ரவேல் ஜனங்களின் ஆர்ப்பரிப்பின் சத்தமும், அழுகையின் சத்தமும் வெகுதூரம் கேட்கப்பட்டது. (வச.13) நமது உணர்வுகள் நாம் நம் தேவனுக்குச் செலுத்தும் அன்பின் ஆராதனையின் வெளிப்பாடாக இருக்கட்டும். அவை நம்மைச் சுற்றியுள்ளவர்களை உணர்வடையச் செய்யட்டும்.