மத்தேயு 5–7ல் காணப்படும் மலைப்பிரசங்கம் யாரும் செயல்படுத்த முடியாத மனிதனின் நடத்தையை அளவிடும் ஓர் அளவுகோல் என அநேக ஆண்டுகளாக நான் கருதினேன். எப்படி நான் அதன் உண்மையான அர்த்தத்தைக் காணத் தவறினேன்? நம்மை சோர்வுக்குள்ளாக்க அல்ல, ஆனால் தேவன் எப்படிப்பட்டவர் என்று கூறவே இயேசு இவ்வசனங்களைப் பிரசங்கித்தார்.
நாம் நம் சத்துருக்களை ஏன் நேசிக்க வேண்டும்? ஏனென்றால் நமது இரக்கமுள்ள பிதா தமது சூரியனை நல்லோர் மேலும், பொல்லாதோர் மேலும் உதிக்கச் செய்கிறார். பரலோகத்தில் ஏன் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டும்? ஏனென்றால், நமது பரமபிதா அங்கு வாசம் செய்கிறார். அவர் அபரிமிதமாய் நமக்குப் பலனளிப்பார். நாம் ஏன் பயப்படாமலும், கவலையின்றியும் வாழ வேண்டும்? ஏனென்றால் காட்டுப் புஷ்பங்களை உடுத்துவிக்கிற தேவன் நம்மையும் உடுத்துவிப்பதாக வாக்களித்திருக்கிறார். ஏன் ஜெபிக்க வேண்டும்? இவ்வுலகப்பிரகாரமான தகப்பன் தன் மகனுக்கு அப்பத்தையோ அல்லது மீனையோ கொடுக்கும்பொழுது, நம் பரமபிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயமல்லவா? மலைப்பிரசங்கத்தில் இயேசு (மத். 5–7) தேவனுடைய குறிக்கோளை அடைய நாம் அயராது முயற்சி செய்ய வேண்டும் என்று மட்டும் கூறாமல், அந்த குறிக்கோளை நாம் யாரும் இந்த உலக வாழ்க்கையில் அடைய முடியாது என்பதையும் விவரிக்கிறார். கொலைகாரர், கோபாவேசமாய் சீறிப்பாய்பவர்கள், விபச்சாரக்காரர், பேராசைப்படுபவர்கள், திருடர், கொள்ளைக்காரர், நாமனைவரும் தேவனுடைய சமுகத்தின் முன் சமதளத்திலேயே நிற்கிறோம். நாம் அனைவரும் நம்பிக்கையற்ற நிலையில் இருக்கிறோம். தேவனை அறிந்துகொள்ள வாஞ்சிக்கும் ஓர் மனிதன் நிற்கக்கூடிய தகுதியான நிலை அது ஒன்றுதான். தேவனுடைய பூரண திட்டத்திலிருந்து கீழே விழுந்த நமக்கு, பூரண கிருபை என்றும் பாதுகாப்பான வலையைத் தவிர நாம் தங்குவதற்கு வேறொரு இடம் வேறெங்கும் இல்லை.