இரண்டுபேர் தங்கள் வியாபார நிமித்தமாகப் பயணம் செய்து வந்ததின் பலனைப்பற்றி மறு ஆய்வு செய்தார்கள். “இந்தப் பயணத்தின்மூலம் ஏற்பட்ட புதிய உறவுகளின்மூலம் புதிய வாணிபத் தொடர்புகள் ஏற்பட்டதால் அது பயனுள்ளதாகவே இருந்தது” என்று தான் நம்புவதாக ஒருவர் கூறினார். “உறவுகள் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் நாம் நம் பொருட்களை விற்பனை செய்வதுதான் மிக முக்கியமானது” என்று அடுத்தவர் கூறினார். இதிலிருந்து அவர்கள் வேறுபட்டக் கருத்துக்களை உடையவர்களாயிருந்தார்கள் என்று தெளிவாகத் தெரிந்தது.

வாணிபத்திலோ, குடும்பத்திலோ அல்லது திருச்சபையிலோ, பிறர் எவ்விதத்தில் நமக்கு பயனுள்ளவர்களாக இருப்பார்கள் என்று நாம் பார்ப்பது எல்லாம் மிக எளிதான காரியமே. இயேசுவின் நாமத்தில் பிறருக்கு எவ்விதத்தில் சேவை செய்யலாம் என்பதையே நோக்கமாகக் கொள்ளாமல், அவர்களிடமிருந்து எதைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதை வைத்தே அவர்களை நாம் மதிப்பிடுவோம். “ஒன்றையும் வாதினாலாவது, வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையுள்ளவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக” (பிலி. 2:3–4) என்று பவுல் அப்போஸ்தலன் பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தில் கூறுகிறார்.

பிற மக்களை நமது சுய லாபத்திற்காகப் பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் அவர்களையும், நம்மையும் தேவன் நேசிக்கிறார். எனவே நாமும் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். எல்லா அன்பைக் காட்டிலும் தேவனுடைய அன்பே மேலானது.