பழைய ஏற்பாட்டின் பிரமாணங்கள் குழப்பமற்ற நிலையில் தெளிவாகக் காணப்படுகிறது. கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள். கர்த்தருக்கு கீழ்ப்படியாவிட்டால் கஷ்டங்கள் நேரிடும். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் சத்தியம். ஆனால் கடைப்பிடிப்பதற்கு இது அவ்வளவு எளிதானதா?

ஆசா இராஜாவின் வாழ்க்கை இதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. அந்நிய தேவர்களை வணங்குவதிலிருந்து மக்களைத் தேவனிடம் திருப்பினான். அவன் இராஜ்ஜியபாரம் செழித்தோங்கியது (2 நாளா. 15:1–19). ஆனால், அவனுடைய பிந்தைய ஆட்சி காலத்தில் தேவனைச் சார்ந்திராமல் தன்னையே சார்ந்து வாழ்ந்தான் (16:2–7). எனவே யுத்தங்களும், வியாதிகளும் அவன் பிந்தைய வாழ்க்கையைப் பாதித்தது (வச.12).

அவனுடைய வாழ்க்கையிலிருந்து ஓர் எளிய தீர்மானத்தை எளிதில் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஞானதிருஷ்டிக்காரனாகிய அனானி “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்கு தேவன் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணுவார்”(16:9) என்று ஆசாவை எச்சரித்தான். நம் இருதயம் ஏன் பலப்படுத்தப்பட வேண்டும்? ஏனெனில் நேர்மையாக காரியங்களைச் செய்வதற்கு தைரியமும் விடாமுயற்சியும் அவசியம்.

தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையே முக்கிய கதாபாத்திரமாக விளங்கிய யோபுவுக்கு கஷ்டங்கள் பல நேர்ந்தது. அவன் செய்த குற்றம் என்ன? அவன் “உத்தமனும் சன்மார்க்கனுமாய் இருந்தான்” (யோபு 1:8). யோசேப்பு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு – தேவனுடைய நல்ல தீர்மானத்தை நிறைவேற்ற – பல ஆண்டுகள் சிறைவாசம் செய்தான் (ஆதி. 39:19–41:1). எரேமியா அடிக்கப்பட்டு காவல் கிடங்கில் போடப்பட்டான் (எரே. 20:2). அந்தத் தீர்க்கதரிசி செய்த குற்றமென்ன? கலகக்காரரான மக்களிடம் உண்மையை எடுத்துரைத்தான் (எரே. 26:15).

வாழ்க்கை என்பது எளியதானதல்ல. தேவனுடைய வழிகள் நம் வழிகளல்ல. அதனால் தேவனுடைய அநாதி திட்டத்தின்படி சரியான தீர்மானம் எடுத்தால், அவருடைய ஆசீர்வாதம் ஏற்ற காலத்தில் கிடைக்கும்.