சீன தத்துவஞானி ஹான் ஃபீஜூ, “உண்மையை அறிந்து கொள்வது எளிது, ஆனால் அந்த உண்மையின்படி எப்படிச் செயல்படவேண்டும் என்று அறிந்து கொள்வது மிகவும் கடினம்” என்று வாழ்க்கையைப்பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
அப்படிப்பட்ட பிரச்சனையோடு ஓர் ஐசுவரியவான் ஒரு முறை இயேசுவிடம் வந்தான். அவன் மோசேயின் நியாயப்பிரமாணங்களை நன்கு அறிந்தவனாகவும், சிறு வயதிலிருந்தே அவற்றை ஒழுங்காகக் கைக்கொள்ளுபவனாகவும் இருந்தான் (மாற். 10:20). இதற்கும் மேலாக, இயேசு என்ன செய்யச் சொல்லப்போகிறார் என்பதை அறிய மிக ஆவலோடு இருந்தான், “நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும்” (வச.17) என்று கேட்டான்.
இயேசுவின் பதில் அந்த ஐசுவரியவானுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அவனுக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்கு கொடுத்துவிட்டு, அவரைப் பின்பற்றும்படி இயேசு அவனிடம் கூறினார் (வச.21) இந்த ஒருசில வார்த்தைகளின் மூலம் அந்த மனிதன் கேட்க விரும்பாத காரியத்தை இயேசு வெளிப்படுத்தினார். அவன் இயேசுவை நம்புவதைவிட, அவனது ஐசுவரியத்தையே நேசித்து அதையே நம்பி வாழ்ந்தான். அவனது ஐசுவரியம் அவனுக்கு அளிக்கும் பாதுகாப்பை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றுவது மிகவும் ஆபத்தானது என்று எண்ணி வருத்தத்துடன் சென்று விட்டான் (வச.22).
அவருடைய சீஷர்கள் அதிகமாய் ஆச்சரியப்பட்டு, அவர்களது போதகர் என்ன நினைக்கிறார்? என்று எண்ணி “அப்படியானால் யார் இரட்சிக்கப்படக் கூடும்?” என்று இயேசுவிடம் கேட்டார்கள். “மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும்” என்று பதில் கூறினார் (வச. 27). அதற்கு தைரியமும், விசுவாசமும் தேவை, “கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்” (ரோம. 10:9).