ஜேம்ஸ் ஒகிலிதோர்ப் (1696–1785) ஒரு பிரிட்டிஷ் தளபதியாகவும், பார்லிமென்டின் ஒரு அங்கத்தினராகவும் இருந்தார். ஒரு மிகப்பெரிய மாநகரத்தை உண்டாக்க வேண்டுமென்று ஒரு தொலைநோக்குத் திட்டம் உடையவராக இருந்தார். வடஅமெரிக்காவில், ஜார்ஜியா மாநிலத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டபொழுது, அவரது தொலைநோக்கு திட்டத்தின்படி சாவன்னா நகரத்தை உருவாக்கினார். அநேக சதுக்கங்களை வடிவமைத்து, ஒவ்வொரு சதுக்கத்திலும் பசுமையான இடங்கள், ஆலயங்கள், பெரிய கடைகள் இவைகளுக்கான இடங்களைத் தெளிவாகத் திட்டம் பண்ணிவிட்டு, மீதமுள்ள இடத்தை வீடுகள் கட்டத்தக்கதாக வடிவமைத்தார். ஒகிலிதோர்ப் தொலைநோக்குத் திட்டத்தில் வடிவமைக்கப்பட்ட அந்த நகரம்தான் இன்றும் மிகவும் அழகாக, சிறப்பாக திட்டமிட்டு கட்டப்பட்ட நகரமாக இன்றுகூட தென் அமெரிக்காவில் மிகவும் தலைசிறந்த நகரமாகக் காணப்படுகிறது.

வெளிப்படுத்துதல் 21ம் அதிகாரத்தில் யோவான் புதிய எருசலேம் என்ற வேறு ஒரு நகரத்தைப்பற்றி ஒரு தரிசனம் கண்டான். அவன் அந்த நகரத்தின் வடிவமைப்பற்றி அதிகம் கூறாமல், அங்கு இருப்பவரைப்பற்றி அதிகமாக விளக்கியுள்ளான். யோவான் நமது நித்திய வீட்டைப்பற்றி விளக்கினபொழுது “பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்” (வெளி. 21:3) என்று எழுதினான். தேவன் அங்கு வாசம்பண்ணுவதால் அங்கு இல்லாத சில காரியங்கள் குறிப்பிடத்தக்கவைகள்: “கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலிலுமிருந்து கண்ணீரைத் துடைப்பார்” என்று ஏசாயா 25:8ஐ மேற்கோள் காட்டியுள்ளார். “இனி மரணமுமில்லை” (வச.4) என்று யோவான் எழுதியுள்ளான்.

இனி மரணமுமில்லை! அங்கு துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை. நமது கவலைகள் அனைத்தும் இந்த அண்ட சராசரத்தின் தேவனுடைய ஆச்சரியமான சுகமளிக்கும் பிரசன்னத்தால் மகிழ்ச்சியாக மாற்றப்படும். இது இயேசுவிடம் மன்னிப்புக்கேட்டு வருகிறவர்கள் அனைவருக்கும் அவர் ஆயத்தப்படுத்தும் பரம வீடாகும்.