இயேசு பயணத்தினால் களைப்படைந்தவராய் யாக்கோபினுடைய கிணற்றின் அருகே ஓய்வு எடுக்க அமர்ந்தார். அவருடைய சீஷர்கள் போஜன பதார்த்தங்களை கொள்ளும்படி சீகார் என்ற ஊருக்குள்ளே சென்றிருந்தார்கள். அந்த சமயத்தில் அந்த ஊரிலிருந்த ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள அந்த கிணற்றிற்கு வந்தாள்… அவளது மேசியாவைக் கண்டாள். அந்த ஸ்திரீ உடனே ஊருக்குள்ளே போய் “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்” (யோவா. 4:29) என்று கூறினதாக அந்த நிகழ்ச்சி நமக்குக் கூறுகிறது.

அந்த சீஷர்கள் போஜன பதார்த்தத்தை வாங்கி வந்தார்கள். போஜனம் பண்ணும்படி அவர்கள் இயேசுவை கேட்டுக்கொண்டபொழுது “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது” (வச.34) என்று இயேசு அவர்களிடம் கூறினார்.

இப்பொழுது நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். இயேசு அப்பொழுது என்ன பணி செய்து கொண்டிருந்தார்? அவர் கிணற்றின் அருகே அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தார்.

சரீரத்தில் குறைபாடுகளை உடையவனாக வாழ்ந்த எனக்கு, இந்த நிகழ்ச்சி அதிக உற்சாகத்தைக் கொடுத்தது. என்னுடைய பரமபிதாவின் சித்தத்தையும், அவரது பணியையும் செய்வதற்காக நான் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டும், ஆடி, ஓடி அலைந்து கொண்டிருக்கத் தேவை இல்லை என்பதை இப்பகுதி எனக்கு விளக்கிற்று. எனது வாழ்க்கையின் இந்தக் காலக்கட்டத்தில், தேவன் அவரது பணியை என்னிடம் கொண்டு வருவதற்கு நான் அமைதியாக அமர்ந்து காத்திருக்கலாம்.

அதுபோல, உங்களது சிறிய வீடு, நீங்கள் பணி செய்யும் இடம், உங்களது சிறையிலுள்ள அறை, அல்லது உங்களது மருத்துவமனைப் படுக்கை எதுவாக இருந்தாலும் அது தேவன் அவரது பணியை உங்களுக்கு கொண்டு வரக்கூடிய, நீங்கள் இளைப்பாறிக் காத்திருக்கும் யாக்கோபின் கிணறாக இருக்கலாம். தேவன், இன்று யாரை உங்களிடம் கொண்டு வரப்போகிறாரோ? என்று நான் சிந்திக்கிறேன்.