எந்தவித தடையுமின்றி உங்கள் ஜெபவாழ்க்கையில் தரித்திருக்க நீங்கள் போராடுகிறீர்களா? நம்மில் அநேகருக்கு அப்படிப்பட்ட அனுபவம் உண்டு. ஜெபம் மிகவும் முக்கியமானது என்று நாம் அறிவோம். ஆனால், அதை செயல்படுத்துவது மிகவும் கடினமான காரியம் என்பதையும் நாம் அறிவோம். நமது ஜெபங்களில், சில நேரங்களில் தேவனோடு மிக ஆழமான தொடர்பு உடையவர்களாக இருப்போம்; சில சமயங்களில் நமது ஜெபம் ஏதோ மேலெழுந்த வாரியாக உள்ளது என்பதை உணர்வோம். நமது ஜெபங்களில் நாம் ஏன் இவ்விதமாக போராடவேண்டும்?
விசுவாச வாழ்க்கை என்பது ஒரு தொலைதூர ஓட்டப்பந்தயம். நம்முடைய ஜெப வாழ்க்கையிலுள்ள உயர்வான நிலை, தாழ்வான நிலை, சமநிலை போன்றவைகள் இந்த ஓட்டத்தின் பிரதிபலிப்பே ஆகும். தொலைதூர ஓட்டப்பந்தயத்திற்கு நாம் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதுபோல, நாம் தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருக்க வேண்டும். உண்மை என்னவென்றால்: ஜெபிப்பதை விட்டுவிட வேண்டாம்!
அதுதான் தேவன் நமக்கு அளிக்கும் நம்பிக்கை ஆகும் “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” (1 தெச. 5:17), “ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள்” (ரோம. 12:12), “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்” (கொலோ. 4:2) என்று பவுல் அப்போஸ்தலன் கூறியுள்ளார். மேலே கூறப்பட்ட வசனங்கள் அனைத்தும் ஜெபத்தில் தொடர்ந்து உறுதியாக தரித்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தையே கூறுகின்றன.
நமது பரம பிதாவாகிய தேவன் நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் சொந்தமானவராக இருப்பதால் நமக்கு நெருக்கமான மக்களோடு கூட எப்படி நெருக்கமான தொடர்பு உடையவர்களாக இருக்கிறோம், அதுபோல தேவனோடும் நெருக்கமாக உறவுகொள்ளலாம். நாம் ஜெபிக்கக் கற்றுக்கொள்ளும் பொழுது நம்முடைய ஜெபவாழ்க்கை, “மிகவும் சாதாரணமாக துவங்கப்பட்டு, மனித ஆத்துமாவினால் எவ்வளவு தூரம் நெருக்கமாக தேவனோடு ஐக்கியம் கொள்ள முடியுமோ, அந்த அளவிற்கு முழுமையான வளர்ச்சியடைகிறது” என்று A.W. டோசர் எழுதுகிறார். உண்மையில் அது தான் நமது தேவை – தேவனோடு கூடிய மிக ஆழமான தொடர்பு. இது நாம் தொடர்ந்து ஜெபிக்கும்பொழுது நடக்கிறது.