எருசலேமிலுள்ள யூத குடியிருப்பில் “டிப்பரெட் இஸ்ரயேல்” என்ற ஜெப ஆலயத்தை நீங்கள் காணலாம். 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த ஜெப ஆலயம், 1948ம் ஆண்டு நடந்த அரேபிய இஸ்ரேலிய யுத்தத்தின்போது படை வீரர்களால் டைனமைட் வெடிவைத்து சிதைக்கப்பட்டது.
அநேக ஆண்டுகளாக அந்த இடம் பாழடைந்த நிலையில் கிடந்தது. பின்னர் 2014ம் ஆண்டு அதை மறுபடியும் புதுப்பிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. நகரத்தின் அதிகாரிகள் இடிபாடுகளிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கல்லை, புதிய கட்டிடத்திற்கு மூலைக்கல்லாக வைத்தார்கள். அதில் ஒருவர் “கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வகாலத்திலிருந்தது போல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்” என்று புலம்பல் 5:21 மேற்கோளாகக் கூறினார்.
புலம்பல் என்ற புத்தகம் எரேமியா தீர்க்கதரிசி எருசலேமின் அழிவைக்குறித்து பாடிய அடக்க ஆராதனைப் பாடலாகும். தீர்க்கதரிசி, அவரது நகரத்தின் மேல் யுத்தத்தினால் ஏற்படவிருக்கும் தாக்கத்தை மிகத்தெளிவாக விளக்கியுள்ளார். வசனம் 21ல் அவரது நகரத்திற்காக தேவன் இடைபட வேண்டுமென்று அவரது இதயத்தின் ஆழத்திலிருந்து ஜெபிக்கிறார். ஆயினும், அது நடக்கக்கூடிய காரியமோ என்று தீர்க்கதரிசி சிந்திக்கிறார். வேதனை நிறைந்த அவரது பாடலை “எங்களை முற்றிலும் வெறுத்து விடுவீரோ? எங்கள் பேரில் கடுங்கோபமாயிருக்கிறீரே”, (வச.22) என்ற பயம் நிறைந்த எச்சரிப்புடன் முடிக்கிறார். அநேக ஆண்டுகளுக்குப்பின்பு அவரது ஜெபம் கேட்கப்பட்டு சிறைப்பட்ட யூதர்கள் எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
நமது வாழ்க்கை கூட அழிவில் இருப்பது போல தோன்றலாம். நாமாக உருவாக்கிக் கொண்ட துன்பங்கள், நம்மால் தவிர்க்க இயலாத போராட்டங்கள் நம்மை நம்பிக்கை இழந்த நிலையில் வைக்கலாம். ஆனால், நம் நிலைமையை நன்கு புரிந்து கொள்ளும் தகப்பன் நமக்கு உண்டு. நம்முடைய வாழ்க்கையில் சிதைந்து போன பகுதிகளை சீர்படுத்தி மறுபடியும் உயர்ந்த, மேலான கூடிய வாழ்க்கையாகப் புதுப்பிக்கிறார். அதற்கு காலதாமதம் ஆகலாம். ஆனால், நாம் அவரை எப்பொழுதும் முழுமையுமாக நம்பலாம். புதுப்பித்துக் கட்டுவதில் அவர் தலை சிறந்த நிபுணர் ஆவார்.