அலாஸ்காவிலுள்ள பால்மர் என்ற நகரத்தில், முதியோர் இல்லத்தில் ஓர் அறையின் பின் பகுதியில் நின்று கொண்டு எனது மகளுடைய உயர்நிலைப்பள்ளியின் பாடகர் குழு “என் ஆத்துமாவிற்கு எல்லாம் நன்றாக உள்ளது” என்ற பாடலைப் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பாடல் குழுவின் தலைவியான என் மகள், அந்தப் பாடலை ஏன் தேர்ந்தெடுத்தாள் என்று சிந்தித்தேன். அந்தப்பாடல் அவளது சகோதரி மெலிசாவின் அடக்க ஆராதனையில் பாடப்பட்ட பாடலாகும். அந்தப்பாடலைக் கேட்பது என் உணர்வுகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதை என் மகள் லிசா அறிந்திருந்தாள்.
நான், என் சூழ்நிலையை மறந்து அமைதியாக நின்று கொண்டிருந்தபொழுது, ஒருவர் தயக்கத்துடன் என் அருகில் வந்து “நான் கேட்க விரும்புவது இதுதான்” என்று கூறினார். என்னை நான் அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டேன்; பின்பு, அவர் ஏன் அந்தப் பாடலை விரும்பினார் என்று கேட்டேன். “எனது மகன் கேமரோனை, சென்றவாரம் மோட்டார் பைக் விபத்தில் இழந்துவிட்டேன்” என்று கூறினார்.
வியப்புடன்கூட, நான் எவ்விதமாக என்னுடைய உணர்வுகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, பிறருடைய தேவைகளைப்பற்றி சிறிதும் சிந்தியாமல் இருந்தேன் என்பதை உணர்த்த, தேவன் அந்தப்பாடலை அவர் விரும்பின முறையில் சரியான இடத்தில் பயன்படுத்தினார். அந்த முதியோர் இல்லத்தில் பணிபுரிந்து வந்த எனது புதிய நண்பராகிய மேக்கை தனியாக அழைத்துச் சென்று, அவரது துக்ககரமான நேரத்தில் தேவன் எவ்வளவு கரிசனையாக உள்ளார் என்பதைப்பற்றி இருவரும் பேசினோம்.
நம்மைச் சுற்றிலும் தேவையுள்ள மக்கள் இருக்கிறார்கள். சில நேரங்களில், நமது சொந்த உணர்வுகள், வேலைத் திட்டங்கள் இவற்றை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு அவர்களுக்கு உதவ வேண்டும். நமது சோதனைகளிலும், துன்பங்களிலும் தேவன் நம்மை எவ்விதமாக ஆறுதல்படுத்தினார் என்பதை உணர்ந்து, நாம் பிறருக்கு ஆறுதல் அளிக்க வேண்டும். “தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகிறோம்” (2 கொரி. 1:4). நமக்கு மிகவும் அருகில் உள்ளவர்களுக்கு ஒரு ஜெபம், ஒரு ஆறுதலான வார்த்தை, ஒரு அன்பான தழுவுதல் அல்லது இயேசுவின் நாமத்தில் ஒரு அன்பான பரிசு தேவைப்படலாம் என்பதை மறந்து நமது கவலைகளிலேயே முழுவதும் மூழ்கிப்போவது மிகவும் எளிதாக உள்ளது.