பழைய ஏற்பாட்டில் 2 சாமுவேலின் புத்தகத்தின் முக்கிய கருத்து என்னவெனில் “வாழ்க்கை என்பது ஓர் குழப்பம்.” இக் கருத்து தொலைக்காட்சியில் வரும் குறுந்தொடர் மினி சீரியலின் அனைத்து அம்சங்களையும் கொண்டது. இஸ்ரவேலின் அரசனாக தன் ஆட்சியை அங்கு நிறுவுவதற்கு தாவீது முயற்சித்த பொழுது அநேக இராணுவ சவால்களையும், அரசியல் சதித்திட்டங்களையும், நண்பர்கள், குடும்பத்தினரால் காட்டிக் கொடுக்கப்படும் காரியங்களையும் சந்தித்தான். தாவீதும் பத்சேபாளிடம் கொண்ட தவறான உறவினால் நிச்சயமாக அவன் குற்றமற்றவன் என்று கூறமுடியாது (2 சாமு 11-12).
ஆனால் 2 சாமுவேல் இறுதி அதிகாரங்களில் தேவனுடைய இரக்கத்திற்காகவும், அன்பிற்காகவும், விடுதலைக்காகவும் பாடிய தாவீதின் துதிப் பாடல்களை நாம் காணலாம். “கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்” (2 சாமு 22:29) என்கிறான்.
இக்கட்டான சமயங்களில் தாவீது தேவனையே நோக்கிப் பார்த்தான். “உம்மாலே நான் ஓர் சேனைக்குள் பாய்ந்து போவேன் (தடைகளைக் தாண்டுவேன்); என் தேவனாலே ஓர் மதிலைத் தாண்டுவேன்” (வச.30).
ஒருவேளை, தாவீதின் வாழ்க்கையை நம்முடைய வாழ்க்கையுடன் இணைத்துப்பார்க்கலாம். நம்மைப் போல் அவனும் ஓர் பூரண புருஷனல்ல! ஆனாலும், தன் வாழ்க்கையின் குழப்பமான சூழ்நிலைகளைவிட தேவன் பெரியவர் என்று அறிந்திருந்தான்.
ஆகையால் நாமும், தாவீதுடன் சேர்ந்து “தேவனுடைய வழி உத்தமமானது, கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமானவர்” என்று சொல்லலாம் (வச.31). இவ்வசனம் நமக்கும் பொருத்தமானது.
வாழ்க்கை குழப்பம் நிறைந்தது, ஆனால் தேவன் அந்த குழப்பங்களுக்கெல்லாம் மேலானவர்.