நாம் பச்சோந்தியை பற்றி நினைக்கும் பொழுது, அது தான் வாழும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் திறமையைப் பற்றி சிந்திப்போம். ஆனால் இந்த பல்லியினப் பிராணிக்கு மற்றுமோர் வேடிக்கையான பண்பும் உண்டு. பல முறை ஒரு பச்சோந்தி, தான் நடந்து செல்லும் பாதை வழியாக நடந்து செல்வதைப் பார்த்து, இது தான் போய் சேரவேண்டிய இடத்தை சேர முடியுமா என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன். வேண்டாவெறுப்பாக அந்த பச்சோந்தி தன் ஒரு காலை விரித்து வைக்கும், பின் தன் மனதை மாற்றி மீண்டும் முயற்சிக்கும். தான் நடப்பதால் பூமி இடிந்து விடுமோ என்று பயப்படுவது போல் தன் பாதத்தை மிகவும் கவனமாகவும், தயக்கத்துடனும் அடியெடுத்து வைக்கும். இன்று ஆலயத்திற்கு போவோம்; இல்லை, அடுத்த வாரம் போவோம்; இல்லை, சிறிது நாட்கள் காத்திருந்து போவோம் என்று கூறுபவர்களைப் பார்த்து “பச்சோந்தி போன்ற ஆலய அங்கத்தினராக இருக்காதீர்கள்” என்று ஒருவர் கூறும் பொழுது என்னால் சிரிக்காமல் இருக்க முடியாது.

எருசலேமில் உள்ள “தேவனுடைய வீடு” தாவீது ராஜாவின் ஆராதனை ஸ்தலம், அவன் பச்சோந்தி போல் ஆராதனைக்கு வருபவன் அல்ல. “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள்” என்று அவனுக்கு சொன்னவர்களுடன் மகிழ்ந்து இருந்தான் (சங் 122:1). ஆதித் திருச்சபை விசுவாசிகளும் அவ்வாறு தான் மன மகிழ்ச்சியாய் இருந்தார்கள் என்பது உண்மையான ஒர் காரியம். “அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்து இருந்தார்கள… அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்தார்கள்” (அப் 2:42-46).

பிறருடன், ஆராதனையிலும், ஐக்கியத்திலும் ஒருமித்து இருப்பது எவ்வளவு பெரிய மகிழ்ச்சி! ஒன்றுகூடி ஜெபித்தல், ஆராதித்தல், ஒன்று கூடி வேதத்தை ஆராய்ச்சி செய்து தியானித்தல் ஒருவர் மீது ஒருவர் கரிசனை கொள்ளுதல் போன்றவை விசுவாசிகளாகிய நமக்கு ஆவிக்குரிய வளர்ச்சிக்கும், ஒருமைப்பாட்டிற்கும் மிகமிக அவசியம்.