தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆன்ட்ரூ முர்ரே என்ற போதகர் 1895ல் இங்கிலாந்திற்கு சென்ற பொழுது, ஏற்கனவே பாதிக்கப்பட்ட முதுகில் ஏற்பட்ட வலியினால் கஷ்டப்பட்டார். அவர் ஒரு வீட்டில் தங்கி சுகம் பெற்றுக் கொண்டு வந்த பொழுது, அந்த வீட்டின் தலைவி, மிகவும் மனகஷ்டத்திற்குள்ளிருந்த ஒரு பெண்ணைப் பற்றிக் கூறி, அவளுக்கு ஆலோசனை கூற அவரால் இயலுமா என்று அறிய விரும்பினாள். “என்னை ஊக்கப்படுத்திக் கொள்வதற்காக நான் எழுதிக் கொண்டிருந்த குறிப்பை அவளிடம் கொடுங்கள் ஒருவேளை இது அந்த பெண்ணிற்கு உதவியாக இருக்கும் என்று முர்ரே கூறினார். அந்த குறிப்பில் முர்ரே கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்:-
“துன்பப்படும் நேரத்தில்:
முதலாவது: தேவன் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்தார். அவருடைய சித்தத்தினால்தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். இதில் நான் இளைப்பாறுவேன். அடுத்தது – இந்த சோதனையில் அவருடைய பிள்ளையாக நடந்து கொள்ள அவர் என்னை அவருடைய அன்பிற்குள் வைத்து, அவருடைய கிருபையை எனக்குத் தருவார்.
பின்பு – நான் இச்சோதனையின் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தை எனக்கு கற்றுக்கொடுத்து, எனக்கு அருள வேண்டிய கிருபையை இந்த சோதனையின் மூலம் அருளி அச்சோதனையை ஆசீர்வாதமாக மாற்றுவார். கடைசியாக அவர் குறித்த நேரத்தில், அவருக்குச் சித்தமான முறையில் இச்சோதனையினின்று வெளியே கொண்டுவருவார். தேவனது சித்தத்தின்படி அவருடைய கண்காணிப்பில் அவர் அளிக்கும் பயிற்சியை பெற்றுக் கொண்டு அவருடைய நேரத்திற்காக காத்திருக்கிறேன்.”
நாம் நமது காரியங்களுக்கு உடனடி தீர்வு வேண்டுமென்று விரும்புகிறோம். ஆனால் அநேகக் காரியங்களுக்கு உடனடியாக தீர்வுகாண இயலாது. அவைகளை அவைகள் இருக்கும் பிரகாரமாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும். தேவன் அவருடைய அன்பினால் நம்மை வழிநடத்துவார். அவருடைய கிருபையினால் அவரில் சார்ந்திருக்கலாம்.