எங்கள் சபைக்கு மிக அருகில் உள்ள சாலையில் அமைத்துள்ள உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்காவில் தான் அனைத்து சபை சமூக கூடுகை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அந்த மாலை வேளையிலே, அப்பூங்காவில் எனக்கு பல வருடங்களாக பரிட்சயமானவர்களிடம் மற்றும் சமீபத்தில் சந்திக்காதவர்களிடமும் நான் பேசி மகிழ்ந்து வாழ்த்து பரிமாறி, தாவர விரும்பிகளால் செவ்வையாய் பராமரிக்கப்பட அச்சூழலை ரசித்து மகிழ்ந்திருக்கையில், ஒரு சபையானது எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பல சின்னங்கள் அங்கு பரவியிருந்ததை உணர்ந்தேன். அதாவது பரலோகம் எப்படியிருக்கும் என்பதை சிறிது வெளிக்காட்டுவது போல் சபையின் செயல்பாடுகள் காட்டின.

ஒரு தோட்டத்திலே, ஒவ்வொரு செடியும் அது நன்றாக வளரக்கூடிய சூழ்நிலையில் நடப்படுவதினால் செழித்து வளருகிறது. தோட்டக்காரர்கள் நிலத்தை நன்கு பண்படுத்தி பூச்சிகளிடமிருந்து செடிகளைப் பாதுகாத்து, ஒவ்வொன்றிற்கும் தேவையான அளவு உரம், நீர், சூரிய ஒளி கிடைக்கச் செய்வதால் தான் மக்கள் சென்று மகிழ்ந்திருக்கக்கூடிய ஒரு நறுமணம் வீசும், வண்ணமயமான ஆழகான இடம் கிடைக்கிறது.

ஒரு தோட்டத்தைப் போலவே, சபையானதும், தேவ மகிமைக்காகவும், அனைவரது நன்மைக்காகவும் எல்லோரும் சேர்ந்து செயல்படும் இடமாக இருக்க வேண்டும். அவரவர் தேவைக்கேற்ப சந்திக்கப்படும் இடமாக இருக்க வேண்டும். நாம் விரும்பும், மற்றவருக்கு நன்மை விளைவிக்கும் வேலைகளை செய்யும் இடமாக இருக்க வேண்டும் (1 கொரி 14: 26).

நன்கு பராமரிக்கப்பட்ட செடிகளைப் போல, நல்ல சூழலில் வளரும் மக்கள், பிதாவின் அன்பை தங்களில் வெளிப்படுத்தி, நறுமணம் வீசி பிறரை தேவனண்டை சேர்த்துக் கொள்ளுவார்கள். சபை பரிபூரணமாக இல்லை, ஆனாலும், உண்மையில் அது பரலோகத்தின் ஒரு சிறு வெளிப்பாடே.