டெக்சாஸ் (Texas) மாநிலத்திலுள்ள கால்நடைப்பண்னையில் வளர்ந்த என்னுடைய நண்பன் (cowboy), அடிக்கடி ஏதாவது ஒரு பழமொழி கூறுவான். அவற்றில், “நல்ல காஃபி செய்ய அதிக தண்ணீர் தேவைப்படாது” என்பது எனக்கு பிடித்த பழமொழி. ஒருவேளை, சில சமயம் யாராவது, தங்களால் அடக்க முடியாத இளங்காளையோடு போராடிக் கொண்டிருந்தாலோ அல்லது வேறு ஏதாவது பிரச்சனையிலிருந்தாலோ, “உனக்குள்ளதை முழுமையாக பற்றிக்கொள். அதாவது, விட்டுவிடாதே! உதவி வருகிறது” என்னும் அர்த்தத்தில் கூக்குரலிடுவான்.
வெளிப்படுத்தின விசேஷத்தில், ஆசியாவிலுள்ள ஏழு திருச்சபைகளுக்கு எழுதப்பட்ட கடிதங்களைக் காணலாம் (2-3 அதிகாரங்கள்). தேவன், முதலாம் நூற்றாண்டில் உள்ளவர்களுக்கு ஊக்கத்தையும், கடிந்துகொள்ளுதலையும், அறைகூவலையும் இக்கடிதங்கள் மூலம் வெளிப்படுத்தினார். அவை அனைத்தும் இக்காலத்திலுள்ள நமக்கும் பொருந்தும்.
“உங்களுக்குள்ளதைப் பற்றிக் கொண்டிருங்கள்” என்னும் சொற்றொடரை இரண்டு முறை தேவன் இக்கடிதங்களில் குறிப்பிட்டுள்ளதைக் காணலாம். தேவன் தியத்தீரா சபையை நோக்கி, “உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக் கொண்டிருங்கள்” (2: 25) என்றும் பிலதெல்பியா சபையை நோக்கி, “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்: ஒருவனும் உன் கீரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு” (3: 11) என்று கூறுகிறார். பலத்த சோதனைகள் மற்றும் எதிர்ப்புகள் மத்தியிலும், அவ்விசுவாசிகள், தேவனுடைய வாக்குத்தத்தங்களை உறுதியாய் பற்றிக்கொண்டு, தங்கள் விசுவாசத்திலே உறுதியாய் தரித்திருந்தார்கள்.
கடுமையான சூழ்நிலையில், சந்தோஷத்தைக் காட்டிலும் துக்கம் பெருகும் வேளையில், தேவன் நம்மை நோக்கி “உனக்குள்ளதைப் பற்றிக்ககொண்டிரு! உதவி வருகிறது!” என்று உரத்த சத்தமிடுகிறார். அவருடைய வாக்குத்தத்ததைப் பற்றிக்கொண்டு விசுவாசத்தில் நிலைத்திருந்து மகிழக்கடவோம்.