என்னுடைய மனைவியின் தாயார் இறந்த பிறகு, அவருடைய வீட்டில், பத்திரமாக வைக்கப்பட்டிருந்த பழைய அமெரிக்க இந்தியர்களின் தலை பொறிக்கப்பட்ட நாணயங்கள் சிலவற்றைக் கண்டடைந்தோம். என் மாமியார் நாணயங்களை சேகரிக்கும் பழக்கத்தை உடையவரல்ல. இருப்பினும், அவர் அந்த நாணயங்கள் பழக்கத்தில் இருந்த காலகட்டத்தில் வாழ்ந்ததால் அவை அவரிடம் இருந்தன.

சிலவற்றைத் தவிர அவற்றில் பெரும்பாலான நாணயங்கள் நல்ல தரத்தில் இல்லை. அவற்றில் பொறிக்கப்பட்ட முத்திரைகளே மழுங்கி போகும் அளவுக்கு அவை பழையதாயிருந்தன. எல்லா நாணயங்களிலும், ஒரு செண்ட் (One Cent) என பொறிக்கப்பட்டிருந்தது. இக்காலத்தில், ஒரு சென்ட்டுக்கு எந்த மதிப்புமில்லை என்றாலும், அவை உபயோகத்தில் இருந்த நாட்களில், அவற்றைக் கொண்டு ஒரு செய்தித்தாள் வாங்கலாம். இப்பொழுதும், பழைய மழுங்கிப்போன நாணயங்களுக்குக் கூட, நாணயங்களை சேகரிப்போரிடத்தில் பெரும் மதிப்பு உண்டு.

ஒருவேளை நீங்கள் உங்களை உபயோகமற்றவாராய், மங்கிப் போனவராய், தேவையற்றவராய் எண்ணலாம். ஆனால் அந்நிலையிலும் தேவன் உங்களை விலையேறப்பெற்றவராய் காண்கிறார். உங்களுடைய சாதனைகளுக்காகவோ அல்லது, அறிவாற்றலுக்காகவோ அல்லது பண்புக்காகவோ அல்லது உடைமைகளுக்காகவோ, சரீரத்துக்காகவோ அல்ல மாறாக நீங்கள் யாராகஇருக்கிறீரோ அவ்வண்ணமாகவே தேவன் உங்களை நேசிக்கிறார். சுதந்தரித்துக் கொள்ள தேவன் எத்தூரத்தைக் கடக்கவும், எந்த விலைக்கிரயத்தையும் கொடுக்க சித்தமுள்ளவராய் இருக்கிறார் (1 கொரி 6: 20).

சொல்லப்போனால், அதை செய்து முடித்து விட்டார். பரலோகத்திலிருந்து இறங்கி வந்து, தன்னுடைய இரத்தத்தையே விலைக்கிரையமாக கொடுத்து உங்களை சுதந்தரித்துக்கொண்டார் (ரோ 5: 6,8-9). அவ்வளவாய் அவர் உங்கள் மேல் வாஞ்சையுள்ளவராய் இருக்கிறார். அவருடைய பார்வையில் நீங்கள் விலையேறப்பெற்றவர். அவர் உங்களை நேசிக்கிறார்.