கிறிஸ்மஸ் முடிந்து வந்திருந்த அநேக தபால்களின் மத்தியில் ஒரு பொக்கிஷத்தைக் கண்டேன். அது பழைய உபயோகப்படுத்தப்பட்ட அட்டையில் வரையப்பட்ட ஒரு கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை. சாதாரண வாட்டர் கலரினால் வரையப்பட்ட குளிரான மலைப்பிரதேசமும், பசுமையான மரங்களும், கீழ்ப்பாகத்தின் நடுவில், சிவந்த பெர்ரி பழங்களுடன், ஹாலி இலைகளினால் ஆன கட்டத்துக்குள் “உனக்கு சமாதானம்!” என்று எழுதப்பட்ட செய்தியும் இருந்தது.

இதை வரைந்தவர் ஒரு சிறைக் கைதி. அவர் என்னுடைய நண்பர். அவருடைய கைவண்ணத்தை ரசித்தவாறே, அவருக்கு கடிதம் எழுதி இரண்டு ஆண்டுகள் ஆயிற்று என்பதை நினைவு கூர்ந்தேன்.

இவரைப் போலவே அநேக ஆண்டுகளுக்கு முன்பு, இன்னொரு கைதியும் சிறையில் தனிமையில் இருந்த நாட்களில் மறக்கப்பட்டு போனார். “லூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான்.” (2 தீமோ 4:11) ஒருவனும் என்னோடே கூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்” (வச:16) என்று அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுக்கு எழுதுகிறார். இந்த சூழ்நிலையிலும், பவுல் சிறையில் தாம் பெற்ற ஆறுதலை “கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று பெலப்படுத்தினார்” (வச. 17) என்று எழுதினார். ஆனாலும் கைவிடப்பட்ட நிலையில் தனிமையின் வேதனையை பவுல் உணர்ந்திருந்தார்.

எனது நண்பர், அந்த அற்புதமான கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையின் பின்புறம், “கிறிஸ்து இயேசுவின் பிறப்பினால் உண்டான சமாதானம், சந்தோஷம், நம்பிக்கை மற்றும் அன்பு உன்னோடும், உன்னை சார்ந்தவர்களோடும் இருப்பதாக” என்று எழுதி, “கிறிஸ்துவுக்குள் உன் சகோதரன்” என கையொப்பமிட்டிருந்தார். நான் அவருக்கு ஜெபிக்க நினைப்பூட்டும் வண்ணமாக, அவ்வாழ்த்து அட்டையை சுவற்றில் மாட்டிவைத்தேன்.

பின்பு, “நாம் இந்த ஆண்டு முழுவதும் தனிமையில் இருக்கும் நம் சகோதர சகோதரிகளை விசாரிக்கலாம்” என அவருக்கு எழுதி அனுப்பினேன்.