வெஸ்ட் ஹைலேண்ட் வகையைச் சேர்ந்த எங்களது வயது சென்ற வெண்மை நிற நாய் எங்களது காலருகே படுக்கையில் சுருண்டு படுத்திருக்கும். கடந்த 13 ஆண்டுகளாக அதுதான் அதனுடைய இடம். பொதுவாக அது அமைதியாக அங்கும், இங்கும் அசையாமல் படுத்திருக்கும். ஆனால் சமீபகாலமாக நடு இரவில் அதன் கால்களால் மெதுவாக எங்களைத் தட்டிப்பார்க்கும். அது வெளியே போவதற்குத்தான் அப்படி செய்கிறதென்று முதலில் எண்ணி அதை வெளியே விட்டோம். பின்பு நாங்கள் எங்களது படுக்கையில் இருக்கிறோமா இல்லையா என்று பார்ப்பதற்குத்தான் அப்படிச் செய்கிறது என்று அறிந்து கொண்டோம். அது ஏறக்குறைய செவிடாகவும், அரை குறையான பார்வையுடனும் இருந்தது, ஆகவே இருட்டிலே எங்களைப் பார்க்கவோ, படுக்கையிலே நாங்கள் அசைவதையோ, நாங்கள் மூச்சு விடுவதையோ அதனால் கேட்க இயலவில்லை. ஆகவே அது மனக்குழப்பமடைந்து, நாங்கள் இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள அப்படி அடிக்கடி எங்களை தொட்டுப் பார்த்துக் கொண்டது. ஆகவே எனது கரத்தை நீட்டி அதன் தலையை அன்புடன் தட்டிக் கொடுப்பதின் மூலம் நான் அங்கே இருப்பதை அதற்கு நிச்சயப்படுத்துவேன். அதற்குத் தேவை அது மட்டும்தான் அது ஒரிரு முறை அங்கும் இங்கும் திரும்பிவிட்டு அமைதியாக உறங்கிவிடும்.
“உம்முடைய சமூகத்தை விட்டு எங்கே ஒடுவேன்”? (சங் 139:7) என்று தாவீது தேவனிடம் கேட்டான். இது தாவீதுக்கு மிக ஆறுதலாக இருந்தது. “சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும் அங்கேயும் உமது கை என்னை நடத்தும். இருளும் அந்தகாரப்படுத்தாது.” (சங் 139: 9-12) என்று அவன் குறிப்பிடுகிறான்.
இருளில் காணாமல் போய்விட்டீர்களா? கவலை, பயம், குற்ற உணர்வு, சந்தேகம் ஏமாற்ற முடையவர்களாக இருக்கிறீர்களா? தேவன் இருக்கிறார் என்ற நிச்சயம் இல்லாதவர்களாக இருக்கிறீர்களா? இருள் அவருக்கு இருளல்ல. நம்மால் அவரைப் பார்க்க இயலாவிட்டாலும், அவர் நம் அருகில் இருக்கிறார். “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.” (எபிரேயர் 13:5) என்று அவர் கூறியுள்ளார். தேவன் இருக்கிறாரா என்று பார்க்க உங்கள் கரத்தை நீட்டுங்கள். அவர் அங்கே தான் இருக்கிறார்.