ஒரு நாள் மத்தியான வேளையில் நானும், எனது ஆவிக்கேற்ற வழிகாட்டியாக இருந்த எனது சிநேகிதனும், தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குவது பற்றி கலந்துரையாடிக் கொண்டிருந்தோம். “உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக” (யாத் 20.7) என்று மூன்றாவது கட்டளை கூறுகிறது. சபிக்கவும் சத்தியம் பண்ணவும் தேவனுடைய நாமத்தை மரியாதையில்லாமல் சாதாரணமாகப் பயன்படுத்துவதும்தான் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குவது என்று நினைக்கிறோம். ஆனால் எனது ஆவிக்குரிய வழிகாட்டியான எனது நண்பன், உண்மையான விசுவாசம் என்றால் என்ன என்பதை விளக்கக்கூடிய சந்தர்ப்பத்தை தவறவிடாமல் மேலே கூறப்பட்ட வழிகளை விட தேவனுடைய நாமத்தை வீணாக வழங்கக்கூடிய மற்ற வழிகளை சிந்தித்துப்பார்க்கும்படி எனக்கு அறைகூவல் விட்டான்.
எனது சொந்த விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக பிறர் கூறும் ஆலோசனைகளைத் தள்ளிவிட்டு. “இந்த வழியில் போகுமாறு தேவன் என்னிடம் கூறினார்” என்று கூறுவது தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குவதாகும்.
என்னுடைய எண்ணம்தான் சத்தியம் என்பதை நீரூபிக்க வேத வசனங்களை அவை பயன்படுத்தப்பட்ட சூழ்நிலைகளைக்கருதாமல், நான் எனது விருப்பத்திற்கு பயன்படுத்தினால், அதுவும் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குவதாகும்.
வேதத்திலிருந்து கவனமின்றி போதித்தாலோ எழுதினாலோ அல்லது பேசினாலோ தேவனுடைய நாமத்தை வீணிலே வணங்குகிறேன்.
“உள்ளான கருத்து என்னவென்றால் தேவனுடைய நாமத்தை அர்த்தமற்ற முறையில் பயன்படுத்த வேண்டாம். தேவனுடைய கனத்தையும், மகிமையையும் அர்த்தமற்றதாக மாற்ற வேண்டாம். தேவனுடைய முக்கியத்துவத்தை குறைக்கக் கூடிய முறையில் பேசுவது அவரது நாமத்தை வீணாக வழங்குவதாகும்” என்று ஜான்பைப்பர் என்ற ஆசிரியர் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குவது பற்றி விளக்கம் கொடுத்துள்ளார்.
எனது சிநேகிதன் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தவும், அவருடைய வார்த்தைகளை மிகவும் கவனத்துடனும், சரியான முறையிலும் பயன்படுத்த அதிகக்கவனம் செலுத்தும்படி எனக்கு ஆலோசனை கொடுத்தான். இதில் எந்தவிதமான குறைவும் ஏற்பட்டால் அது தேவனை அவமதிப்பதாகும்.