வட அட்சரேகையில் மலைகளால் சூழப்பட்ட இடமான நார்வேயிலுள்ள ருஷ்ஷீகானில், ஓர் ஆண்டில் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை இயற்கையான சூரிய ஒளி கிடைக்காது. நகரத்திற்கு ஒளிதர அந்த நகர மக்கள், மலைகளின் மேல் பெரிய கண்ணாடிகளை நிறுத்தி, சூரிய ஒளியை பிரதிபலிக்கச் செய்து, அந்நகர மையத்தில் ஒளி விழச் செய்தார்கள். அந்த மிகப்பெரிய கண்ணாடிகள், சூரியன் உதிப்பதிலிருந்து அஸ்தமிக்கும் வரை சுழன்று கொண்டே இருப்பதால், அந் நகரத்திற்கு சூரிய ஒளி தொடர்ந்து கிடைத்தது.
அந்தக் காட்சியைப் போலவே கிறிஸ்தவ வாழ்க்கையும் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” என்று இயேசு அவரைப் பின் பற்றினவர்களிடம் கூறினார் (மத்தேயு 5:;14) என்று யோவான் சீஷன் எழுதினான். அது போலவே நம்மைச் சுற்றியிருக்கிற இருளில் பிரகாசிக்க இயேசு நம்மை அழைக்கிறார். “இவ்விதமாய் மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது”. (மத்தேயு 5:16) வெறுப்பின் மத்தியில் அன்பையும், உபத்திரவங்கள் மத்தியில் பொறுமையையும், சண்டை சச்சரவுகள் மத்தியில் சமாதானத்தையும் காண்பிக்க நாம் அழைக்கப்படுகிறோம். “முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்” (எபேசியர் 5:8) என்று பவுல் அப்போஸ்தலன் நமக்கு நினைப்பூட்டுகிறார்.
“நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்” (யோவான் 8:12) என்று இயேசுவும் கூறியுள்ளார். தேவகுமாரனாகிய இயேசுவின் ஒளியின் பிரதிபலிப்பே நமது ஒளியாகும். சூரியன் இல்லாமல் ருஷ்ஷீகானில் பொருத்தப்பட்டுள்ள பெரிய கண்ணாடிகள் ஒளியை பிரதிபலிக்க இயலாதது போல, இயேசு இல்லாமல் நம்மாலும் ஒன்றும் செய்ய (ஒளி கொடுக்க) இயலாது.