இன்றையதினம் மிகவும் துக்ககரமான வார்த்தைகளைக் கேட்டேன். இரண்டு விசுவாசிகள் அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடுடைய ஒரு காரியத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரில் மூத்தவர் தன்னைப் பற்றி உயர்வான எண்ணம் உடையவராக, வேதவசனங்களை ஆயுதம் போல அதிகாரத்தோடு பயன்படுத்தி அடுத்த நபரின் வாழ்க்கையில், காணப்பட்ட தவறுகளைக் குத்திக் காண்பித்துக் கொண்டிருந்தார். வயதில் இளயவர் மூத்தவராலும், அவரது குறைகூறுதலினாலும் சோர்வடைந்து ஆர்வத்தை இழந்து விட்டார்.
அவர்களுடைய அந்த உரையாடல் முடிவுக்கு வந்த பொழுது, மூத்த மனிதன் இளய மனிதனின் ஆர்வமற்ற தன்மையைக் குறித்து விமர்சித்தான். “பொதுவாக நீ ஆர்வத்துடன் இருப்பாய்” என்று பேச ஆரம்பித்தவன். திடீரென்று பேச்சை நிறுத்தி விட்டு “நீ விரும்புவது என்னவென்று எனக்குத் தெரியவில்லை” என்றான்.
“என்னை நேசிக்கும் சந்தர்ப்பத்தை நீ இழந்துவிட்டாய்” என்று இளையவன் கூறினான். “நீ என்னை அறிந்தகாலமுதல் உனக்கு முக்கியமாகத் தெரிந்தது என்னவென்றால், என்னைக் குறித்து நீ தப்பாக நினைக்கும் காரியங்களையே சுட்டிக் காட்டுவதேயாகும். நான் விரும்புவது என்ன? உன்னிலும் உன் மூலமாயும் இயேசுவைக் காண விரும்புகிறேன்” என்றான்.
இந்தக் காரியம் என்னிடம் கூறப்பட்டிருந்தால் நான் நிலைகுலைந்து போயிருப்பேன் என்று எண்ணினேன். அநேகரை நான் நேசிக்கக் கூடிய சந்தர்ப்பத்தை இழந்ததைக் குறித்து, அந்த நேரத்தில் பரிசுத்தாவியானவர் எனக்கு உணர்த்தினார். மேலும் என்னில் இயேசுவைக் காண இயலாத மக்களும் உண்டு என்று நான் அறிந்தேன்.
நாம் என்ன செய்தாலும் அனைத்து செயல்களின் அடிப்படை நோக்கம் அன்பாகத்தான் இருக்க வேண்டுமென்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். (1 கொரிந்தியர் 13:1-4) பிறரிடம் அன்பு காட்ட வேண்டிய அடுத்த தருணத்தைத் தவறவிட்டு விடாதீர்கள்.