நமது வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாத காலங்களே கிடையாது. ஆனால் சில சமயங்களில் அதன் விளைவு மிகவும் பயங்கரமாக இருக்கும்.
1994ல் ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலையின் போது ரோஸ் என்ற பெண்ணையும் அவளது இரு சிறு மகள்களையும் தவிர, அனைத்து குடும்ப அங்கத்தினர்களும் கொலை செய்யப்படுவதைப்பார்த்தாள். இப்பொழுது அங்கு இருக்கும் பல விதவைகள் மத்தியில் இவளும் ஒரு விதவையாகக் குறைந்த வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வருகிறாள். ஆனால் தோற்கடிக்கப்படுவதற்கு அவள் இடம் கொடுக்கவில்லை. மேலும் இரு அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்தாள். 5 பேருள்ள அவளது குடும்பத்தினரைப் போஷிக்கவும், பிள்ளைகளின் பள்ளிக்கட்டணத்திற்காகவும் தேவனையே நம்பி வருகிறாள். கிறிஸ்தவ இலக்கியங்களை அவளது சொந்த மொழியில் மொழி பெயர்க்கிறாள். அங்குள்ள மற்ற விதவைகளுக்கு வருடாந்திரக் கூடுகை நடத்துகிறாள். அவளது வாழ்க்கையைப்பற்றி என்னிடம் கூறின பொழுது ரோஸ் அழுது விட்டாள். ஆனால் அவளது வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு பிரச்சனைக்கும், “இதற்கு இயேசு எனக்கு உண்டு” என்ற எளிய தீர்வை அவள் வைத்திருக்கிறாள்.
இன்றையதினம் நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி தேவன் நன்கு அறிவார். தேவன் நம்மைப் பற்றி மிகத்தெளிவாக அறிந்திருப்பதைக் குறித்து தேவன் நமது பெயர்களை அவரது உள்ளங்கையில் வரைந்து வைத்துள்ளாரென்று ஏசாயா நமக்கு நினைப்பூட்டுகிறார். ( ஏசாயா 49: 16). நாம் சில சமயங்களில் நமக்கு மிக நெருக்கமாக உள்ளவர்களின் தேவைகளைக்கூட கவனிக்காமல் இருக்கலாம். ஆனால் தேவன் நமது வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் மிகத் தெளிவாக அறிந்துள்ளார். நம்மை வழிநடத்தி, ஆறுதல் படுத்தி, பெலப்படுத்த தேவன் அவரது ஆவியை நமக்கு தந்தருளியுள்ளார்.
இந்த நேரத்தில் நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி சிந்தியுங்கள். பின்பு உங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் எழுதி ஒவ்வொரு பிரச்சனைக்கு அருகிலும் “இதற்கு எனக்கு இயேசு உண்டு” என்று எழுதுவதின் மூலம் தேவனது உண்மைத் தன்மையையும், அவருக்கு நம்மீதுள்ள கரிசனையையும் நினைவூட்டிக்கொள்ளலாம்.