“மனித வாழ்வின் மிக முக்கிய முடிவு, தேவனை மகிமைப்படுத்தி அவரோடு என்றென்றும் மகிழ்ச்சியாக இருப்பதே” என்று வெஸ்ட் மினிஸ்டர் நற்போதகம் கூறுகிறது. வேதாகமத்தின் அதிகமான பகுதிகள் மகிழ்ச்சியுடன் கூடிய நன்றியுணர்வுடன் ஜீவனுள்ள தேவன் மீது ஆழமான அன்பு செலுத்தி அவரைப் பணிந்து கொள்வதைப் பற்றிக் கூறுகிறது. தேவனை நாம் கனப்படுத்தும் பொழுது நன்மையான எந்த ஈவிற்கும் மூலகாரணர் அவரே என்று அவரைப் போற்றுகிறோம்.
நாம், நமது உள்ளத்திலிருந்து தேவனைத் துதிக்கும் பொழுது, நாம் என்ன நோக்கத்திற்காக சிருஷ்டிக்கப்பட்டோமோ அதற்கான மகிழ்ச்சியின் உன்னத நிலைமைக்குக் கொண்டு போகப்படுகிறோம். மிக அழகான சூரிய அஸ்தமனம் அல்லது அமைதியான இயற்கை காட்சி எப்படியாக சிருஷ்டிகரின் மாட்சிமையைக் காண்பிக்கிறதோ அதுபோல தேவனை ஆராதிப்பதினால் அவரோடுகூட நெருங்கிய ஆவியின் ஐக்கியத்தைப் பெறுகிறோம். “கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்க வருமாயிருக்கிறார்;… தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் கர்த்தர் சமீபமாயிருக்கிறார்”. (சங்கீதம் 145:3,18) என்று சங்கீதக்காரன் கூறுகிறான்.
தேவனுக்கு நமது துதி தேவை இல்லை. ஆனால் நாம் தேவனை துதிக்க வேண்டும், அவரது பிரசன்னத்தில் திளைக்கும் பொழுது, அவரது நித்திய அன்பின் மகிழ்ச்சியைப் பருகி நம்மை மீட்டு இரட்சிக்க வந்த இயேசுவில் மகிழ்ச்சி அடைகிறோம். “உம்முடைய சமூகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு” (சங் 16:11) என்று சங்கீதக்காரன் கூறுகிறான்.