நான் சிறுவனாக இருந்த பொழுது எனது தாயார் நெருப்போடு ஒரு போதும் விளையாடக் கூடாது என்று என்னை எச்சரித்தார். ஒரு நாள் நெருப்போடு விளையாண்டால் என்ன நேரிடும் என்று அறிய விரும்பினேன். சில காகிதங்களையும் தீப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு பரிசோதனை செய்ய முயன்றேன். இதயம் படபடக்க தரையிலே முழங்கால் படியிட்டு தீக்குச்சியைக் கொளுத்தி காகிதத்தைப் பற்றவைத்தேன்.
திடீரென்று என் தாயார் வருவதைப் பார்த்தேன். நான் செய்த செயலைக் குறித்து எனது தாயார் அறிந்து கொள்ளக் கூடாதென்று நெருப்புச் சுவாலையின் மேல் என் கால்களை வைத்து மூடினேன். ஆனால் என் தாயாரோ “டென்னி கால்களை எடு, கால்களுக்கு கீழ் நெருப்பு உள்ளது” என்று சத்தமிட்டுக் கூறினார்கள். நல்ல வேளை என் கால்களில் தீக்காயம் படுமுன்பு என் கால்களை வெகு வேகமாக எடுத்துவிட்டேன். நெருப்போடு விளையாடக் கூடாது என்று எனது தாயார் இட்டகட்டளை எனது சந்தோஷத்தைக் கெடுப்பதற்காக அல்ல, ஆனால் நான் நெருப்பினால் காயப்பட்டுவிடாமல் பத்திரமாக இருப்பதற்காகவே என்பதை உணர்ந்து கொண்டேன்.
சில நேரங்களில் தேவனது கட்டளைகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களை நாம் புரிந்து கொள்வதில்லை, தேவன் கட்டளைகளையும், கற்பனைகளையும் கொடுத்து, நாம் நமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்க இயலாதபடி, நம் அனைவரின் சந்தோஷத்தையும் கெடுக்கிறார் என்று கூட நாம் நினைக்கலாம். ஆனால் நமக்குச் சிறந்தது எது என்பதை அவரது உள்ளத்தில் வைத்துள்ளதால், நாம் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று தேவன் நம்மிடம் கேட்கிறார். நாம் அப்படி அவருக்குக் கீழ்ப்படியும் பொழுது, அவரது அன்பில் நிலைத்திருந்து சந்தோஷத்தால் நிரப்பப்படுகிறோம்.
ஆகவே நாம் பாவம் செய்யக் கூடாதென்று தேவனால் எச்சரிக்கப்படும் பொழுது நமது நன்மைக்காகவே அவர் அப்படிச் செய்கிறார் “நாம் நெருப்போடு விளையாடி” நம்மை நாமே காயப்படுத்திக்கொள்ளாமல் இருக்கவே தேவன் உண்மையில் விரும்புகிறார்.