பியட் ஏரியில் பசுமையாக இருந்த நீர்ச்செடிகள் நிறைந்த பகுதிக்கு அருகில் தெளிவான அமைதியான நீரில் மீன் பிடித்துக் கொண்டிருந்தேன். அடர்த்தியான செடிகளுக்குள்ளிருந்து ஒரு சிறிய வாயுடைய பெரிய பாஸ் வகை மீன் சுற்றுப்புறத்தை ஆராய மெதுவாக எட்டிப் பார்த்ததை கவனித்தேன். எனது தூண்டிலில் மாட்டப்பட்டிருந்த உணவு அதற்கு ஆசையை உண்டாக்கினதினால் அதன் அருகில் வந்து உற்று நோக்கியபின் அது மறுபடியும் செடிகளுக்குள்ளே சென்று விட்டது. தூண்டியில் மாட்டியிருந்த தூண்டில் முள்ளைப் பார்க்கும் வரைக்கும் இந்நிகழ்ச்சி பலமுறை நடந்தது. தூண்டில் முள்ளைக் கண்டவுடன் தனது வாலை வேகமாக ஆட்டிக் கொண்டு அதன் இருப்பிடத்திற்குள் சென்று மறைந்து விட்டது. பின்பு அது வெளியே வரவில்லை.
நமக்கு முன்பாக தூண்டில் முள்ளுகள் கொக்கிகளைப் போன்ற சோதனைகளை சாத்தான் கொண்டுவருவான். அது பார்ப்பதற்கு இனிமையாகவும், நமது ஆசைகளை பூர்த்தி செய்யக் கூடியதாகவும் இருக்கலாம். ஆனால் சாத்தானுடைய வல்லமை சோதிப்பதோடு முடிந்துவிட்டது. அந்தக் முள்ளில் மாட்டிக்கொள்ள அவன் நம்மை கட்டாயப்படுத்த முடியாது. நமது தீர்மானத்திற்கு மேல், நமது சித்தத்திற்கு மேல் சாத்தான் செயல்பட முடியாது. பரிசுத்தாவியானவரால் எச்சரிக்கப்பட்டு சாத்தானுடைய சோதனைகளுக்கு மறுப்பு சொல்லும்பொழுது, அதற்குமேல் சாத்தானால் செயல்பட இயலாது. அவன் ஒடிப்போவானென்று யாக்கோபு கூறுகிறார். (யாக் 4:7)
பயங்கரமான சோதனையில் (மத்தேயு 26:33-35) அகப்பட்டு மீண்ட பேதுரு அப்போஸ்தலனின் வார்த்தைகள் மூலம், விசுவாசிகளாகிய நாம் ஆறுதல் அடையலாம். “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள் … எதிர்த்து நில்லுங்கள்” (1பேதுரு 5:8-9) என்று பேதுரு அவருடைய வாழ்க்கையின் பின்பகுதியில் எழுதினார்.
அந்த பெரிய பாஸ் வகை மீன் என்னுடைய தூண்டில் முள்ளை எப்படி புறக்கணித்ததோ அதுபோல தேவனுடைய பெலத்தினால், நமது மனதைக் கவரக் கூடிய சாத்தானின் தந்திரமான உத்திகளை வெற்றிகரமாக மேற்கொள்ளலாம்.